கனிந்த கனி
காலையில் விடைபெற்று மாலையில் வருகிறாய்
களைப்பின் கனத்தால் மௌனமாய் அமர்கிறாய்
“சாப்பிட்டாயா?” “தூங்கலாமா?”
இந்த நான்கு சொல்லின் சிறைக்குள்
நம் காதலை அடைக்கிறாய்!
ஆயிரம் சொல் அள்ளித் தரும் அகராதி
உன் உள்ளத்தில் இருக்க
ஆருயிர் மனைவியோடு பேச
ஒரு சொல் கூட இல்லையா?
நீ மட்டும் தான் உழைக்கிறாயா அன்பே…
நானும் வீட்டினுள் மெழுகாய் தேய்கிறேன்!
விலையுயர்ந்த பரிசுகள் கேட்கவில்லை
எதிர்பாரா கணத்தில் தரும் முத்தம் தேடுகிறேன்!
சமையலறை வியர்வையில் நான் நினைக்கும்போது
பின்னால் இருந்து செய்யும் சிறு சீண்டல் எதிர்பார்க்கிறேன்!
காமமும் காதலும் கலந்த தீண்டலில்
என் நாணத்தின் சிவப்பை மீண்டும் காணத் துடிக்கிறேன்!
கனிந்து நிற்கும் கனியை ரசிக்காமல் விட்டுவிட்டால்
அது அழுகிப் போகும் என்பது உனக்குத் தெரியாதா?
திருமணத்தின் தொடக்கத்தில் தீராத வார்த்தைகள்
இன்று தீர்ந்துபோனதாய் நினைக்கிறாயோ?
வார்த்தைகள் தீர்ந்துபோவதல்ல
அவற்றை மீண்டும் மீண்டும் படைப்பதே காதல்!
காலம் முழுதும் சலித்துபோய்க் கிடக்க நான் பொருளல்ல
ரசிப்பதற்கும் ருசிப்பதற்கும் உனக்கொரு காலம் உண்டு!
காலம் கடந்து கனி அழுகிய பின் நினைத்தால்
கையில் மிஞ்சுவது வெறும் கசப்பு மட்டுமே!
என்னை ரசிக்க உனக்கு மனம் இல்லையா?
இல்லை…
என்னை ருசிக்க உன் மனம் ஏங்கவில்லையா??
விடை தெரியாமல்…
உன் அன்பிற்காக ஏக்கத்தோடு காத்திருக்கிறேன்
-அன்பின் வித்தகன்..

