“சட்டம் என்பது ஒரு கண்ணாடி போன்றது; அதில் ஒரு சிறு விரிசல் விழுந்தாலும், காட்டும் முகம் சிதைந்து போகும். சிறிய சட்டத்தை மதிக்காத சமூகம், பெரிய சட்டத்தை ஒருபோதும் போற்றாது.”
“சந்தேகத்தின் பேரில் ஒருவரை விசாரிப்பதற்கும், அவரைத் தண்டிப்பதற்கும் உள்ள இடைவெளிதான் ‘ஜனநாயகம்‘. ஆனால், இன்று நம் காவல் நிலையங்களில் அந்த இடைவெளி இருக்கிறதா?“ ஒருவர் மீது புகார் கொடுக்கப்பட்ட உடனேயே, அவரைச் சமூகம் ஒரு குற்றவாளியாகப் பார்க்கத் தொடங்கிவிடுகிறது. ஆனால் சட்டம் என்ன சொல்கிறது? “குற்றம் நிரூபிக்கப்படும் வரை அனைவரும் நிரபராதிகளே!” (Innocent until proven guilty). இந்த அடிப்படை உரிமையை நிலைநாட்டவும், சாமானியர்கள் பயமின்றி காவல் நிலையத்தை அணுகவும், நம் காவல் துறையின் நடைமுறைகளில் மாற்றம் வருவது காலத்தின் கட்டாயம். இதோ சாமானியனின் குரலாக சில அவசரச் சீர்திருத்தங்கள்:
1. பத்து ரூபாய் பொருளுக்கு இருக்கும் மரியாதை, மனித உயிருக்கு இல்லையா?
கடையில் வாங்கும் ஒரு பத்து ரூபாய் சிப்ஸ் பாக்கெட்டில் கூட, “இங்கே கிழிக்கவும்” (Tear Here) என்று ஒரு வழிமுறை (Instruction) உள்ளது. ஆனால், ஒரு மனிதனின் வாழ்க்கையையே மாற்றக்கூடிய காவல் நிலையத்தில், “சட்ட வழிமுறைகள்” எங்கே?
- சீர்திருத்தம்: ஒவ்வொரு காவல் நிலையத்தின் வரவேற்பறையிலும் ஒரு பெரிய பலகை (Instruction Board) இருக்க வேண்டும். அதில்:
- “உங்கள் மீது வழக்குத் தொடரப்பட்டால் அடுத்து என்ன நடக்கும்?”
- “ஜாமீன் (Bail) பெறுவது எப்படி?”
- “கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன?” என்ற வழிமுறைகள் சாமானியனுக்கும் புரியும் எளிய தமிழில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
2. புகாரை ஏற்க மறுக்கிறீர்களா? காரணம் சொல்லுங்கள்!
ஒரு சாமானியன் காவல் நிலையத்திற்குப் புகார் அளிக்கச் செல்லும்போது, “இதை எடுக்க முடியாது, அந்த ஸ்டேஷனுக்கு போ” என்று வாய்மொழியாக விரட்டியடிப்பது அநீதி.
- சீர்திருத்தம்: ஒரு புகாரை ஏற்க மறுத்தால், அதற்கான காரணத்தை (எல்லைப் பிரச்சனை, போதிய சாட்சியமின்மை, அல்லது இது சிவில் வழக்கு போன்றவை) புகார் மனுவின் பின்புறத்திலோ அல்லது தனித்தாளிலோ எழுத்துப்பூர்வமாக எழுதி, அதிகாரி கையெழுத்திட்டு, முத்திரையிட்டுத் தர வேண்டும்.
வித்தகன் சிந்தனை: “சட்டை அழுக்கானால் துவைக்கலாம் அல்லது மாற்றலாம். ஆனால் சட்டம் துருப்பிடித்தால், அது சமூகத்தையே சிதைத்துவிடும்.”
3. போனில் மிரட்டல் வேண்டாம்… சட்டப்படி அழையுங்கள்!
ஒருவர் மீது புகார் வந்தால், அவரைத் தொலைபேசியில் மிரட்டுவதோ, வலுக்கட்டாயமாக ஜீப்பில் ஏற்றுவதோ கூடாது.
- சீர்திருத்தம்: அவருக்கு எழுத்துப்பூர்வமான அழைப்பானை (Summons) அனுப்ப வேண்டும். அதில் அவரை “குற்றவாளி” (Accused) என்று குறிப்பிடக்கூடாது. குற்றம் நிரூபிக்கப்படாத வரை, அவர் “சந்தேகத்திற்குரிய நபர்” (Suspect) என்று மட்டுமே குறிப்பிடப்பட வேண்டும்.
4. வழிப்போக்கர்களுக்குப் பதில் சொல்லத் தேவையில்லை!
விசாரணைக்காகக் காத்திருக்கும் ஒருவரிடம், அந்த வழியாகச் செல்லும் சம்பந்தமில்லாத காவலர்கள் எல்லாம், “ஏய்… நீ என்ன பண்ண? என்ன கேஸ்?” என்று ஆளுக்கு ஒரு கேள்வி கேட்பது மனித உரிமை மீறல்.
- சீர்திருத்தம்: விசாரணைக்கு வந்த நபர், அந்தக் வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரிக்கு (Investigating Officer) மட்டுமே பதில் சொல்லக் கடமைப்பட்டவர். வழக்கை விசாரிக்க அதிகாரம் இல்லாத மற்ற காவலர்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
5. விசாரணை அறை ‘இரகசிய அறை’ அல்ல!
காவல் நிலையத்தின் நான்கு சுவர்களுக்குள் நடப்பது வெளியே தெரிவதில்லை என்ற தைரியமே பல அத்துமீறல்களுக்குக் காரணம்.
- சீர்திருத்தம்: விசாரணைக்கு ஆஜராகும் நபர் உள்ளே நுழைந்தது முதல், வெளியே செல்லும் வரை அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும். அவர் அளிக்கும் வாக்குமூலத்தைப் படித்துக்காட்டி, “நான் சொன்னது இதுதான்” என்று அவர் ஒப்புக்கொண்ட பிறகே கையெழுத்து பெற வேண்டும்.
6. நீதிமன்றம் சொல்லும் வரை… அது ‘டூப்ளிகேட் எப்.ஐ.ஆர்’ மட்டுமே!
காவல் நிலையம் என்பது ஒரு விசாரணை மையம் மட்டுமே; அது நீதிமன்றம் அல்ல. ஆனால், இங்கு பதியப்படும் எப்.ஐ.ஆர் ஒருவரின் எதிர்காலத்தையே பாழாக்குகிறது.
- சீர்திருத்தம்: காவல் துறையினர் விசாரிக்கும் வரை பதிவு செய்யப்படும் வழக்கு, வெறும் ‘தற்காலிகப் பதிவு’ (Duplicate FIR / Provisional FIR) ஆக மட்டுமே இருக்க வேண்டும்.
- நீதிமன்ற விசாரணை முடிந்து, நீதிபதி எப்போது “இவர் குற்றவாளிதான்” என்று தீர்ப்பு அளிக்கிறாரோ, அப்போதுதான் அது ‘அசல் எப்.ஐ.ஆர்’ (Original FIR) அல்லது ‘குற்றப் பதிவேடாக’ மாற்றப்பட வேண்டும்.
- இடையில் அவர் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டால், இந்த ‘Duplicate FIR’ கிழிக்கப்பட வேண்டும்; அவர் மீது எந்தக் கறையும் இருக்கக்கூடாது. இதுதான் உண்மையான நீதி.
7. டிஜிட்டல் சாட்சியம் – காவல் துறையே பொறுப்பு!
சைபர் கிரைம் வழக்குகளில் சிக்கும் நபர்களின் மொபைல் போன்களை வாங்கும் போது, தனிநபர் சுதந்திரம் காக்கப்பட வேண்டும்.
- சீர்திருத்தம்: மொபைல் போனை வாங்கும் முன்பே, அதில் உள்ள ‘Storage’ அளவு (GB), போனின் நிலை ஆகியவற்றை ஒரு படிவத்தில் நிரப்பி கையெழுத்து வாங்க வேண்டும். போனை ஒப்படைத்த பிறகு, அதிலிருந்து ஏதேனும் தகவல்கள் அழிக்கப்பட்டாலோ அல்லது தவறாகச் சேர்க்கப்பட்டாலோ அதற்கு காவல் துறையே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
வித்தகன் சிந்தனை: “சட்டையைக் காப்பாற்றச் சட்டத்தை வளைப்பவன் காவலன் அல்ல; சட்டத்தைக் காப்பாற்றச் சட்டையையே தியாகம் செய்பவன்தான் உண்மையான காவலன்!”
சீருடைக்குள் இருக்கும் ‘கடமை’ ஏன் மௌனமாகிறது?
1. 10 வருடங்களுக்கு முன் vs இன்று: என்ன மாற்றம்?
10 வருஷத்துக்கு முன்னாடி ஒரு காவலர் விடுமுறையில் இருந்தாலும், ஒரு அநீதியைப் பார்த்தால் சட்டையைக் கழற்றி வைத்துவிட்டு இறங்கி வேலை செய்வார்.
அன்று: “மக்களின் நண்பன்” என்பது வெறும் வாசகம் அல்ல; அது ஒரு தார்மீகப் பொறுப்பாக இருந்தது.
இன்று: ஒரு காவலர் தன்னிச்சையாகச் செயல்பட்டால், அவர் மீது “துறை ரீதியான நடவடிக்கை” எடுக்கப்படும் என்ற பயம் அல்லது அரசியல் தலையீடு அவர்களைக் கட்டிப்போடுகிறது.
2. தவறு யாருடையது?
காவலர்கள் தட்டிக் கேட்க முடியாமல் போவதற்கு அவர்கள் மட்டும் காரணமல்ல; அந்தத் தவறு இந்தக் கட்டமைப்பில் (System) இருக்கிறது:
அரசியல் அழுத்தம்: காவல்துறை முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், உள்ளூர் அரசியல் குறுக்கீடுகள் நேர்மையான அதிகாரிகளின் கைகளைக் கட்டிவிடுகின்றன.
பாதுகாப்பற்ற நிலை: ஒரு “இரகசிய அறை”யாகவே இருப்பதால், காவலர்கள் செய்யும் நல்ல விஷயங்களை விட, தவறான விஷயங்களே பெரிதுபடுத்தப்பட்டு அவர்கள் மீது களங்கம் கற்பிக்கப்படுகிறது.
3. சட்டம் எங்கே மீறப்படுகிறது?
சட்டம் காக்கப்பட வேண்டிய இடத்திலேயே சட்டம் மீறப்படுவதுதான் ஆகப்பெரிய அநீதி.
எப்.ஐ.ஆர் பதிவு: ஒருவர் மீது புகார் வந்தால், விசாரணைக்கு முன்பே அவரை “குற்றவாளி” எனச் சமூகம் முத்திரை குத்துவதும், காவல்துறை அதைத் தடுக்கத் தவறுவதும் சட்ட மீறல்.
உரிமைகள் மறுப்பு: காவல் நிலையங்களில் சாமானியர்களுக்குத் தேவையான அந்த “வழிமுறை பலகை” (Instruction Board) இல்லாததால், சட்டம் அவர்களுக்குப் புரியாத புதிராகவே நீடிக்கிறது.
முடிவுரை
ஒரு பத்து ரூபாய் பொருளை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லித்தரும் இந்த சமூகம், ஒரு மனிதன் சட்டத்தை எப்படிக் கையாள வேண்டும் என்று சொல்லித் தராதது ஏன்?
“குற்றம் சுமத்தப்படுவது” வேறு, “குற்றம் நிரூபிக்கப்படுவது” வேறு. இந்த வித்தியாசத்தை உணராத வரை, இங்கே நீதி என்பது கானல் நீரே! ஒளிவுமறைவற்றத் தன்மையே (Transparency) நீதியின் முதல் படி. காவல் நிலையங்கள் ‘பயங்கரமான இடங்களாக’ இல்லாமல், ‘பாதுகாப்பான இடங்களாக’ மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை!
என்றும் மானுடத்தின் தோழமையுடன், – வித்தகன்.
அனுபவமும் ஆதங்கமும்: இறுதியாக ஒரு உண்மையை நான் பதிவு செய்தே ஆக வேண்டும். இக்கட்டுரை காவல் துறையை முழுமையாகக் குறை சொல்வதற்காக எழுதப்பட்டதல்ல; அவர்களை மேம்படுத்துவதற்கான ஓர் ஆதங்கமே.
ஏனெனில், தனிப்பட்ட முறையில் ‘100’ என்ற அவசர எண்ணை அழைத்த போதெல்லாம், மின்னல் வேகத்தில் செயல்பட்டு, சமூக விரோதிகளிடமிருந்து என்னை மூன்று முறை காப்பாற்றியது இதே காவல் துறைதான். அந்த இக்கட்டான தருணங்களில் அவர்கள் காட்டிய வேகம், நேர்மை மற்றும் பொறுப்புணர்ச்சி மெய்சிலிர்க்க வைத்தது. அந்த உண்மையான காவலர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
ஆனால், என்னுடைய கேள்வி ஒன்றுதான்… ‘100’ என்ற எண்ணில் கிடைக்கும் அந்த நியாயமும், கண்ணியமும், ஏன் சாமானியன் ஏறிச் செல்லும் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் கிடைப்பதில்லை? கட்டுப்பாட்டு அறையில் (Control Room) இருக்கும் அந்த ‘மக்களின் நண்பன்’, காவல் நிலையத்திற்குள் நுழையும்போது மட்டும் மாறிவிடுவது ஏன்? தொலைபேசியில் கிடைக்கும் பாதுகாப்பு, நேரில் சென்றால் கிடைக்குமா என்ற சந்தேகம் ஏன் எழுகிறது?
ஆண்டாண்டு காலமாக மாநிலத்தின் மிக முக்கியத் துறையான காவல் துறை, முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில்தான் (Portfolio) இயங்கி வருகிறது. எத்தனையோ ஆட்சிகள் மாறிவிட்டன, எத்தனையோ முதலமைச்சர்கள் மாறிவிட்டார்கள். ஆனால், காவல் நிலையங்களின் நடைமுறைகள் மட்டும் ஏன் இன்னும் மாறவில்லை? அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்களால் கூட, ஏன் இந்தத் துறையில் முழுமையான சீர்திருத்தங்களைக் கொண்டுவர முடியவில்லை? அல்லது கொண்டுவர விரும்பவில்லையா?
இனியாவது வரும் காலங்களில், மாற்றங்கள் வெறும் காகிதத்தில் மட்டுமில்லாமல், காவல் நிலையத்தின் ஒவ்வொரு மேசையிலும் எதிரொலிக்குமா? முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் இத்துறை, ‘அதிகாரத்தின் குறியீடாக’ இல்லாமல், ‘சேவையின் குறியீடாக’ மாறுமா?
மாற்றம் வருமா என்ற நம்பிக்கையுடனும், விடை தெரியா கேள்விகளுடனும்,
– வித்தகன்.
இவர்கள் சாமானியனுக்குத் தோள் கொடுக்கும் ‘நண்பர்களா’? அல்லது நண்பன் என்ற போர்வையில் ‘நம்பிக்கையை உடைப்பவர்களா’? இந்தக் கேள்விக்கான பதிலை இனி வரும் காலம்தான் சொல்ல வேண்டும்.
அதே சமயம், ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு. பொதுமக்களை வாட்டி வதைக்கும் சில காவலர்கள் ஒருபுறம் என்றால், அரசியல்வாதிகளின் அழுத்தத்தாலும், மேலதிகாரிகளின் கெடுபிடிகளாலும் தினம் தினம் செத்துப்பிழைக்கும் நேர்மையான சாதாரண காவலர்கள் மறுபுறம்.
அதிகார வர்க்கத்தின் கையில் சிக்கிய பொம்மைகளாக, சாதாரண காவலர்கள் எப்படிப் பாதிக்கப்படுகிறார்கள்? அவர்களின் மனழுத்தத்தையும், அவர்கள் சந்திக்கும் அரசியல் நெருக்கடிகளையும் நாம் எப்படித் தடுத்து நிறுத்தப்போகிறோம்?
காவல் துறையின் மறுபக்கத்தையும், அதற்கான சீர்திருத்தங்களையும் வரும் வாரங்களில் விரிவாக அலசுவோம்…
காத்திருங்கள்!
