தடைகளின் விலாசம்

Spread the love

அத்தியாயம் 1: வேர்களும் வெற்று வெளியும்

உணர்ச்சி வறண்ட நடை.

மேடான பகுதியிலிருந்து சரிவை நோக்கிப் பள்ளத்தில் இறங்கிச் சென்று கொண்டிருந்தான் புனிதன். அவன் கால்களின் ஓசை, அவனுள் எந்த உணர்ச்சியையும் எழுப்பவில்லை; அது வெறும் இயந்திர இயக்கமாக இருந்தது. ஒரு கோமாவில் இருப்பவனைப் போல, அவன் கண்கள் எதையோ இலக்கு வைத்து அலைந்தன, ஆனால், எங்கு செல்கிறான் என்பதை அவன் உணர்ந்திருக்கவில்லை. தான் சுமந்து வந்த துரோகங்கள், வெட்கங்கள், குற்றவுணர்வுகள் என அனைத்தையும் உதறித் தள்ளி, அதிலிருந்து விடுபட வேண்டும் என்ற ஒரே வேட்கையுடன் அடியெடுத்து வைத்தான்.

ஒவ்வொரு அடியும் பாரமாக இருந்தது. கால்கள் ‘இங்கே இருக்க வேண்டுமா?’ என்று தடுமாற, மனம் ‘இங்கு இல்லையென்றால் வேறு எங்கு செல்வது?’ எனப் பிணைத்தது. பிடிக்காத ஒரு நிர்ப்பந்தம், கண்ணுக்குத் தெரியாத ஒரு கை அவனைப் பிடித்துத் தள்ளுவது போல, “இங்கிருந்து விலகிச் செல்! போய்விடு!” என்று துரத்துவது போன்ற உணர்வுடன் நடந்தான். மெதுவான, நிதானமான பயணம் சாத்தியமில்லை; வேகவேகமாய், தன் நினைவுகளிலிருந்து விலகி ஓட முயற்சிக்கும் அவசர நடை அது.

அவன் கண்களில் ஒரு பெரிய இச்சி மரம் தென்பட்டது. அதன் சாம்பல் நிறப் பொந்துகளும், காற்றில் தடீரென அசைந்துகொண்டிருந்த கிளைகளும், அவன் உள்ளத்தின் அசைவில்லாத் தனத்தை ஏளனம் செய்வது போல் இருந்தது. தன்னையறியாமலே, அவன் கால்கள் அந்த மரத்தின் பக்கம் திரும்பின. மரத்தின் சாம்பல் நிறப் பொந்துகளில், காலத்தின் கைவண்ணம் தெரிந்தது. காற்றில் அசையும் கிளைகள், புனிதனின் அசைவற்ற நிலையைக் கேலி செய்வது போலிருந்தது.

அவனது மன அழுத்தமும் கோபமும் சிந்தனையாக வெடித்தன: “டேய் முட்டாள் மரமே! உனக்கு அறிவில்லையா? உன்னைச் சுற்றி இவ்வளவு சிமெண்டுக் கற்களால் வேலி அமைக்கப்பட்டிருந்தும், இந்தத் தடையைத் தாண்டியும் நீ எப்படித்தான் உயிர் வாழ்காய்? உனக்கு உணவு உண்ண வழியே இல்லையே? உன்னுடைய வேர்கள் ஊடுருவ முடியாமல் சிமெண்டால் அடைத்திருக்கிறார்கள். இது கூடத் தெரியாமல் பெரும் சிலையாக வீற்று இருக்கிறாயே, உனக்கு அறிவில்லையா?”

திடீரெனப் புனிதனின் உணர்வுத் தளத்தில் ஒரு மறுமொழி, ஒரு நிதானமான அலைப்பு போல் அவன் மனதிற்குள் கேட்டது. அந்த இச்சி மரம் தன்னுள் பேசுவது போலவே அவன் உணர்ந்தான்:

“டேய் புனிதா! இது நான் செய்யவில்லை. உன்னைப்போல மனிதர்கள்தான் மரத்தைச் சுற்றி சிமெண்ட் கான்கிரீட் அமைத்து என்னை உணவு உண்ண முடியாமல் தடுத்து நிறுத்தினார்கள். ஆனால், நான் கற்களையும், மக்களையும், முட்களையும், கடினமான பாறைகளையும் என்னுடைய வேர்கொண்டு துளைத்துக் கொண்டு வந்துதான், இங்கே நிமிர்ந்து நிற்கிறேன், தெரியுமா?”

இச்சி மரம், காற்றின் அசைவில் மேலும் கிளைகளை அசைத்தது. அந்த அசைவு, புனிதனை நோக்கி ஒரு கேள்வியை வீசுவது போல் அவன் உள்ளுணர்விற்குத் தோன்றியது:

“யார் முட்டாள்? என்னை ‘அறிவில்லாதது’ என்கிறாயா? ஏதோ ஒரு விஷயம் நடந்துவிட்டது என்பதற்காக ஊரைவிட்டு ஓடுகிறாய். ஓடுகாளி தானே நீ! நீ எப்படி என்னைக் குறை கூற முடியும்?”

புனிதன் அந்த மரத்தின் முன் ஒரு சிலையாக நின்று உறைந்துபோனான். மரம் தன்னையே கேள்வி கேட்பது போல் உணர்ந்தான்.

திடீரென்று, அந்தச் சிந்தனையைக் கலைக்கும் விதமாக, ஒலிபெருக்கி வைத்த ஒரு வாகனத்தின் ஓசை காதில் விழுந்தது. ஒரு நிமிடம் தெளிவு பெற்றவன், ஈச்சமரத்தின் அருகிலுள்ள சிமெண்ட் தரையில் சோர்வுடன் அமர்ந்தான். முதுகுப் பையைக் கூடக் கழட்டவில்லை. அமர்ந்திருந்த அவனது கண்களிலிருந்து யாருக்கும் தெரியாமல் கண்ணீர் வழிந்தது. “நான் செய்த தவறு என்ன? யாருக்குத் துரோகம் செய்தேன்?” என்று யோசித்தான்.

“ஆம்! துரோகம் செய்தேன். என்னைப் பெற்றவர்களுக்கு! அந்தத் துரோகம் என் வாழ்நாள் முழுவதும் என்னைவிட்டுப் போகாது. துரோகத்தின் உச்சமே இதுதான். இந்தத் துரோகத்திற்கு உச்சபட்ச தண்டனை வழங்கினாலும் தவறல்ல!”

அவன் அமர்ந்த இடத்திலிருந்து நூறு மீட்டர் தொலைவில், ஒரு பெரிய ஆலமரம் சுடுகாட்டைப் பார்த்தபடி நின்றது. அந்த மரத்தைப் பார்த்ததும் அவன் மனம் மீண்டும் பழைய வேதனைக்குள் மூழ்கியது.

“ஏ, இறைவா! நீ எல்லாம் இருக்கிறாயா இல்லையா? அன்றே நான் குடித்த மருந்து வேலை செய்திருந்தால், இந்நேரம் இந்தச் சுடுகாட்டில் நானும் எரிக்கப்பட்டுச் சாம்பலாகி இருப்பேன் இல்லையா? இப்படி வாழவும் விடாமல், சாகவும் விடாமல், அரை உயிரும் அடிபட்டவன் போல, அறிவுயிரில் போராடிக் கொண்டிருக்க வைக்கிறாயே! இது நியாயமா? என்னை அழைத்துக் கொள்! நான் வாழந்து செய்த துரோகம் பெரியது. அதற்கு மன்னிப்பே கிடையாது.”

அவன் பேசியதைக் கவனித்துக் கொண்டிருந்தது போல், ஒரு பெரிய காற்று அடிக்க, ஆலமரத்தின் ஒரு சிறிய கிளை முறிந்து அவன் மீது லேசாக விழுந்தது.

“டேய் மரமே! நீயும் என்னைக் கொல்லப் பார்க்கிறாயா? சரி, நீயாவது என்னைக் கொன்றுவிடு!” என்று புனிதன் கேட்டான்.

மறுபடியும், அவனுள் ஓர் உணர்வு அலையடித்தது. இம்முறை, அது முன்புைவிட ஆழமாகவும், அதிகாரபூர்வமாகவும் அவன் உள்மனதில் எதிரொலித்தது:

“டேய் முட்டாள் மனிதனே! உன்னைக் கொல்வதற்கு அல்ல, உன் உணர்வுகளைப் புரிந்துகொண்டு உன்னை நல்வழிப்படுத்துவதற்காக! நான் எப்படி இங்கு இத்தனை வருடங்கள் அமர்ந்திருக்கிறேன் என்பதைக் கவனி.”

“நான் சிறுபிள்ளையாக நடப்பட்டேன். இப்போது நூறு வருடங்கள் கடந்து செழிப்பாக இருக்கிறேன். நீ கூறினாயே, சிமெண்ட் கான்கிரீட்டைப் போட்டு மூடிவிட்டார்கள் என்று! சிமெண்ட் மட்டுமல்ல, எவ்வளவு தடைகள் வந்தாலும் நான் தாங்கி நிற்பேன். காரணம் என்னவென்றால், நான் கற்களையும், முட்களையும், கடினமான பாறைகளையும் துளைத்துக் கொண்டு, ஆழமாக வேர்களை அமைத்தேன். முதலில் நான் வேர் அமைக்கக் கடன்பட்டேன். கடினப்பட்டேன். அதன் பிறகு, இப்போது எனக்கு எந்தக் கவலையும் இல்லாமல் அழகாக உட்கார்ந்திருக்கிறேன். எத்தனை புயல் வந்தாலும், இடி விழுந்தாலும் என்னை ஒன்றும் செய்யாது.”

ஆலமரத்தின் இந்த ‘உரை’ புனிதனுக்குள் ஒரு திடீர் உணர்வை, ஓர் எழுச்சியை ஏற்படுத்தியது. அவன் சிந்திக்க ஆரம்பித்தான்.

“இத்தனை தடைகளைத் தாண்டியும் இந்த மரம் இவ்வளவு பெரிதாக வளர்ந்திருக்கிறதென்றால்… நாம் இப்போது வேர்களை அமைப்பதற்கான நேரம் வந்துவிட்டதா? ஆம்! நான் இப்போது வீழ்ந்து கிடக்கவில்லை. நான் துரோகம் என்ற குழியில் தள்ளப்படவில்லை, மாறாக… நான் இப்போதுதான் விதைக்கப்பட்டிருக்கிறேன்! இது ஒரு புதை குழி அல்ல, இது வேர் விடுவதற்கான களம்!”

“நான் ஒரு விதையாக விதைக்கப்பட்டுவிட்டேன். இனி என் வேலை வேர்களை விடுவதுதான்! வேர்களை எப்படி நாம் கட்டமைப்போம் என்பதைப் பற்றித் தானே யோசிக்க வேண்டும்!”

தன்னம்பிக்கையின் ஒரு சிறு ஒளி, விடியலின் முதல் கதிர் போல், அவன் மனதின் வெற்று வெளியில் பிறந்தது. கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக்கொண்டு, அவன் எழுந்தான்.

இலக்கைத் தேடும் பயணம்

சரியாக அப்போது, ஒரு பேருந்து “பாம் பாம் பாம் பாம்” என்று ஒலி எழுப்பியபடி, வேகத்தடையில் ஏறி குதித்து மகிழ்ச்சியாக வருவது போல் அவனுக்குத் தோன்றியது. “டேய் புனிதா! உன்னை ஏற்றிச் செல்லப் போகிறேன். உன் லட்சியத்திற்கான முதல் படி நானே. இந்தப் பயணத்தை நான் தொடங்கி வைக்கிறேன்,” என்று பேருந்து கூறுவது போல அவன் உணர்ந்தான்.

பேருந்தில் ஏறி அமர்ந்ததும், ஒலித்த ஒரு பாடல் அவனைக் கேட்க விடாமல் எரிச்சலைத் தந்தது. எரிச்சலில் வேக வேகமாகப் பாக்கெட்டிலிருந்த இயர்போனை எடுத்து மாட்டிக்கொண்டு, அவன் ஒரு பாடலைக் கேட்க ஆரம்பித்தான்: “பொதுவாக எம் மனசு தங்கம், ஒரு போட்டியில் வந்துவிட்டால் சிங்கம்!”

அந்த ஊக்கமூட்டும் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தபோதும், அவன் செய்த துரோகம் பற்றிய நினைவுகள் மீண்டும் மீண்டும் அவனைத் தொந்தரவு செய்தன. அந்த இழுவையிலிருந்து தப்பிக்க, அடுத்தடுத்துப் பாடல்களை மாற்றி மாற்றி கேட்டான். ஒவ்வொரு பாடலும், அவன் உள்ளத்தில் முளைக்கத் தொடங்கிய புதிய விதையை, வேரூன்றச் செய்யும் நீர்ப்பாசனம் போல் இருந்தது.

வாழ்க்கையை மாற்றி அமைக்கும் ஒரு பயணத்தின் தொடக்கமாக, எப்படியோ அவன் மதுரையில் உள்ள மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தை அடைந்து விட்டான். புதிய ஒரு வாழ்வின் சாத்தியக்கூறுகள், அங்குள்ள கூட்டத்தின் நடுவில், அவனை எதிர்பார்த்துக்கொண்டிருந்தன.

 

                                                    தடைகளின் விலாசம் தொடரும்………………….

 
Did you find this post helpful?
 0 0
50%
50%
Loading read count...
Share this post:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *