தமிழ்நாடு அரசு இணையதளமா? இல்லை ஐரோப்பிய அரசு இணையதளமா?

Spread the love

 

எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்பதுதான் நமது முழக்கம். ஆனால், நடைமுறையில் நம் தாய்மொழி எங்கே இருக்கிறது என்பதைத் தேடிப் பார்த்தால் ஏமாற்றமே எஞ்சுகிறது. குறிப்பாக, தமிழக அரசின் அதிகாரப்பூர்வ வலைதளத்தைப் (Website) பார்த்தால், அது நமக்கே உரித்தான அரசுத் தளமா அல்லது ஏதோ ஒரு ஐரோப்பிய நாட்டு அரசு இணையதளமா என்கிற ஐயம் எழுகிறது. அந்த அளவுக்கு ஆங்கிலத்தின் ஆதிக்கம் அங்கே கோலோச்சுகிறது.

பெயரில் மட்டுமே தமிழ்!

அரசின் இணையப் பக்கத்திற்குள் நுழைந்ததும், முகப்பில் ‘தமிழ்’ மற்றும் ‘ஆங்கிலம்’ என்று இரு தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. சரி, நம் தாய்மொழியில் தகவல்களைப் பெறலாம் என்று ஆர்வமாக ‘தமிழ்’ என்பதை அழுத்தினால், அங்கேதான் ஒரு விந்தையான விளையாட்டு நடக்கிறது.

பக்கத்தின் தலைப்புகள் மட்டும் தமிழில் மின்னுகின்றன. ஆனால், உள்ளே இருக்கும் மிக முக்கியமான அரசாணைகளும் (Government Orders), விண்ணப்பப் படிவங்களும் (Forms) முழுமையாக ஆங்கிலத்திலேயே இருக்கின்றன. இது யாரை ஏமாற்றும் வேலை? இது தமிழ்நாடா அல்லது லண்டனா? என்பதுதான் நமது முதல் கேள்வி.

இது யாருக்கான அரசு?

தன் நிலம் தொடர்பான விவரத்தையோ அல்லது ஓய்வூதியம் (Pension) தொடர்பான அரசாணையையோ இணையத்தில் தேடும் ஒரு சாமானியத் தமிழருக்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் என்பது என்ன கட்டாயம்? ஒரு கிராமத்து விவசாயிக்குத் புரியாத மொழியில் தகவல்களைத் தருவது, அவருக்குச் சேவை செய்வதாகுமா? ஐரோப்பிய மொழியில் அரசாணைகளை வெளியிட்டால், தமிழ் மட்டுமே அறிந்த பாமர மக்கள் எங்கே போவார்கள்?

“தமிழ் இணையதளம் என்று உள்ளே சென்றால் ஆங்கிலத்தில் சிரிக்கும் அரசாணைகள்”

நாங்கள் முன்வைக்கும் வினாக்கள்:

  • தமிழக அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சி மொழி என்றால், இணையதளப் (Internet) பயன்பாட்டில் மட்டும் ஏன் இந்த மெத்தனம்?
  • அரசாணைகளை வெளியிடும்போதே அவற்றை தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒரே நேரத்தில் பதிவேற்றத் தடையாக இருப்பது எது?
  • மென்பொருள் (Software) துறையில் உலகத்தையே ஆளும் தமிழர்கள் இருக்கும்போது, ஒரு வலைதளத்தை முழுமையாகத் தமிழில் மாற்ற ஆட்கள் இல்லையா?

அரசியல் மேடைகளில் மட்டும் தமிழைப் போற்றினால் போதாது அமைச்சர்களே… மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் கோப்புகளிலும் தமிழ் மணம் வீச வேண்டும்.

“நமது எதிர்ப்பு நூறு சதவீதமெனில், நமது ஆக்கபூர்வமான வளர்ச்சி ஐந்நூறு சதவீதமாக அமைய வேண்டும்! பிறமொழி திணிப்பை எந்த வேகத்தில் எதிர்க்கிறோமோ, அதே வேகத்தையும் துடிப்பையும் அக்கறையையும் அன்னைத் தமிழின் வளர்ச்சியில் காட்டுவோம்!”

 
Did you find this post helpful?
 0 0
50%
50%
Loading read count...
Share this post:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *