அரசியல் களம்: தேசிய கீதமா? தேசத்துக்கான ‘ஈகோ’வா? – 13 உண்மைகளை மறைக்கும் திரை!
பொங்கல் பண்டிகையின் சர்க்கரைப் பொங்கல் இனிப்பு நாவில் கரையும் முன்பே, தமிழக அரசியல் களத்தில் கசப்பான நிகழ்வுகள் அரங்கேறிவிட்டன. ஜனவரி 20, 2026 அன்று தமிழ்நாடு சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் வெறும் அரசியல் சலசலப்பு மட்டுமல்ல; அது இந்திய அரசியலமைப்புச் சட்டம் வகுத்துத் தந்துள்ள “முதல் அடிப்படைக் கடமை” (Fundamental Duty 51A-a) அப்பட்டமாக மீறப்பட்டதற்கான நேரடி சாட்சி.
ஆனால், அதைவிடப் பெரிய ஆபத்து ஒன்று நம் கண்ணுக்குத் தெரியாமல் மறைக்கப்படுகிறது. “தேசிய கீதம் முந்தி பாட வேண்டுமா? பிந்தி பாட வேண்டுமா?” என்ற கூச்சலுக்கு நடுவே, ஆளுநர் முன்வைத்த 13 மரண பயம் காட்டும் குற்றச்சாட்டுகள் சத்தமில்லாமல் புதைக்கப்படுகின்றன.
நாங்கள் என்ன விளையாட்டுப் பொம்மைகளா? எங்களை திசை திருப்பப் பார்க்கிறீர்களா? என்ற சாமானியனின் கேள்வியே இந்தக் கட்டுரையின் மையம்.
உடைக்கப்பட்ட முதல் கடமை (Article 51A-a)
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 51A(a) தெளிவாகச் சொல்கிறது:
“அரசியலமைப்புச் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடப்பதும், அதன் இலட்சியங்கள் (Ideals), நிறுவனங்கள் (Institutions), தேசியக் கொடி மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றை மதிப்பதும் ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.”
ஜனவரி 20 அன்று, சட்டசபையில் இந்த “முதல் கடமை” இரண்டு விதங்களில் உடைக்கப்பட்டது:
-
ஆளுநர் செய்த தவறு: தேசிய கீதம் என்பது 52 வினாடிகள் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிற்கும் ஒரு உணர்வுப்பூர்வமான தருணம். அதை, “நீ இதைச் செய்தால்தான் நான் உரையாற்றுவேன்” என்று ஒரு பேரம் பேசும் பொருளாக (Bargaining Chip) ஆளுநர் மாற்றியது, தேசிய கீதத்தின் புனிதத்தைக் குறைக்கும் செயல்.
-
அரசு செய்த தவறு: ஆளுநர் என்பவர் மாநிலத்தின் முதல் குடிமகன். அவர் பேசத் தொடங்கும்போதே மைக்கை அணைப்பதும், கூச்சல் போடுவதும் “சட்டசபை” என்ற அரசியலமைப்பு நிறுவனத்தை (Institution) அவமதிக்கும் செயலாகும்.
இங்கு “தேசிய கீதம்” (சின்னம்) கையில் எடுக்கப்பட்டது; ஆனால் “ஜனநாயகம்” (லட்சியம்) காலில் போட்டு மிதிக்கப்பட்டது.
எங்கே அந்த வீடியோ? (The Missing Evidence)
சட்டசபையில் என்ன நடந்தது? ஆளுநர் கோபமாக வெளியேறியது தெரியும். ஆனால், உள்ளே அவர் பேச முயன்றது என்ன? அவர் மைக் அணைக்கப்பட்டது உண்மையா?
- எல்லா இடங்களிலும் சிசிடிவி (CCTV) வைக்கும் அரசாங்கம், சட்டசபைக்குள்ள ஆளுநர் பேசின அந்த 10 நிமிட “உண்மையான வீடியோவை” மட்டும் ஏன் வெளியிடவில்லை?
- நமக்குக் காட்டப்படுவதோ “தணிக்கை செய்யப்பட்ட” (Edited Democracy) காட்சிகள். ஆளுநர் பேசும் காட்சி இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஏன் மறைக்கிறீர்கள்? ஒருவேளை அந்த வீடியோ வெளியானால், அவர் வாசிக்க முயன்ற அந்த 13 உண்மைகள் மக்கள் காதுக்குப் போய் சேர்ந்துவிடும் என்ற பயமா?
தேசிய கீதச் சண்டையில் புதைக்கப்படும் 13 உண்மைகள்!
“ஆளுநர் மரபை மீறிவிட்டார்” என்று குதிக்கும் ஆளுங்கட்சியே… அவர் வெளியிட்ட அறிக்கையில் உள்ள இந்த 13 குற்றச்சாட்டுகளுக்கு உங்கள் பதில் என்ன?
தேசிய கீதத்திற்கு காட்டிய வீரத்தை, ஏன் இந்த அவலங்களுக்குக் காட்டவில்லை?
1. மைக் அணைப்பு – ஜனநாயகம் எங்கே?
- ஆளுநர் குற்றச்சாட்டு: “நான் பேசும்போது என் ஒலிவாங்கி (Mic) மீண்டும் மீண்டும் அணைக்கப்பட்டது.”
- எங்கள் கேள்வி: சட்டசபையில் ஆளுநருக்கே பேச உரிமை இல்லை என்றால், எதிர்க்கட்சிகளுக்கும், மக்களுக்கும் அங்கே என்ன இடம் இருக்கிறது? உண்மையை மறைக்கவா மைக்கை அணைத்தீர்கள்?
2. தவறான தகவல்கள் கொண்ட உரை
- ஆளுநர் குற்றச்சாட்டு: “அரசு தயாரித்த உரையில் பொய்யான தகவல்களும், உண்மையை மறைக்கும் செய்திகளும் இருந்தன.”
- எங்கள் கேள்வி: ஆளுநரையே பொய் சொல்லச் சொல்லி வற்புறுத்துவதுதான் உங்கள் அரசியலமைப்பு கடமையா?
3. முதலீடு – காகிதப் புலி?
- ஆளுநர் குற்றச்சாட்டு: “12 லட்சம் கோடி முதலீடு என்பது வெறும் காகிதத்தில்தான் உள்ளது. அந்நிய முதலீட்டில் 4-ம் இடத்தில் இருந்த தமிழ்நாடு, 6-ம் இடத்திற்குச் சறுக்கிவிட்டது.”
- எங்கள் கேள்வி: வேலை தேடும் இளைஞர்களுக்கு நீங்கள் சொல்லும் பதில் என்ன? முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கிறார்கள் என்றால், இங்கே நடப்பது வளர்ச்சியா? வீழ்ச்சியா?
4. பெண்கள் பாதுகாப்பு – பாலியல் வன்முறை
- ஆளுநர் குற்றச்சாட்டு: “பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை 33% அதிகரித்துள்ளது. குழந்தைகளைத் தாக்கும் போக்சோ வழக்குகள் 55% உயர்ந்துள்ளது.”
- எங்கள் கேள்வி: தேசிய கீத அவமதிப்புக்குத் துடிக்கும் நீங்கள், பல்லாயிரம் பெண்களின் மானம் பறிக்கப்படும்போது ஏன் துடிக்கவில்லை? இதற்கு ஏன் இதுவரை ஒரு விளக்கம் இல்லை?
5. போதைப்பொருள் – 2,000 மரணங்கள் (மிக முக்கியம்)
- ஆளுநர் குற்றச்சாட்டு: “போதைப்பொருள் பழக்கத்தால், ஒரே ஆண்டில் 2,000 இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்டனர்.”
- எங்கள் கேள்வி: இதுதான் இருப்பதிலேயே மிக ஆபத்தான குற்றச்சாட்டு. 2,000 உயிர்கள் போயிருக்கிறது! இது பொய் என்றால், உடனே மறுத்திருக்க வேண்டும். மௌனமாக இருக்கிறீர்கள் என்றால், “ஆம், 2,000 பேர் செத்தார்கள்” என்று ஒத்துக் கொள்கிறீர்களா?
6. தலித் மக்கள் மீதான தாக்குதல்
- ஆளுநர் குற்றச்சாட்டு: “தலித் மக்களுக்கு எதிரான அட்டூழியங்கள் கடுமையாக அதிகரித்துள்ளன.”
- எங்கள் கேள்வி: சமூக நீதி பேசும் ஆட்சியில், ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதை ஆளுநரே சுட்டிக்காட்டுகிறார். வேங்கைவயல் முதல் நாங்குநேரி வரை நடந்ததை மறக்க முடியுமா?
7. தற்கொலைத் தலைநகரம்
- ஆளுநர் குற்றச்சாட்டு: “ஆண்டுக்கு 20,000 தற்கொலைகள் நடக்கிறது. தினமும் 65 பேர் சாகிறார்கள். தமிழ்நாடு இந்தியாவின் தற்கொலைத் தலைநகராகிவிட்டது.”
- எங்கள் கேள்வி: மக்கள் நிம்மதியாக இருந்தால் ஏன் சாகப் போகிறார்கள்? இந்த 20,000 பிணங்களின் மீது நின்றுகொண்டுதான் நீங்கள் “நாங்கள் சாதனை படைத்தோம்” என்று உரை வாசிக்கச் சொன்னீர்களா?
8. கல்வித் தரம் – ஆசிரியர் பற்றாக்குறை
- ஆளுநர் குற்றச்சாட்டு: “50% ஆசிரியர் பணியிடங்கள் காலி. கல்வித் தரம் அதல பாதாளத்திற்குச் சென்றுவிட்டது.”
- எங்கள் கேள்வி: பாடம் நடத்த வாத்தியார் இல்லாமல், ஏழை மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கிவிட்டு, என்ன சாதனை விளக்க உரை வேண்டிக்கிடக்கிறது?
9. உள்ளாட்சி ஜனநாயகம் காலி
- ஆளுநர் குற்றச்சாட்டு: “ஆயிரக்கணக்கான கிராம ஊராட்சிகளுக்குத் தேர்தலே நடத்தப்படவில்லை.”
- எங்கள் கேள்வி: கிராமங்களின் அதிகாரத்தைப் பறித்து உங்கள் கையில் வைத்துக்கொள்ள ஆசைப்படுவது ஏன்? இது ஜனநாயகப் படுகொலை இல்லையா?
10. கோவில் நிர்வாகச் சீர்கேடு
- ஆளுநர் குற்றச்சாட்டு: “கோவில்களில் அறங்காவலர்கள் இல்லை. நீதிமன்றத் தீர்ப்புகளை 5 ஆண்டுகளாக மதிக்கவில்லை.”
- எங்கள் கேள்வி: நீதிமன்றத்தையே மதிக்காத நீங்கள், ஆளுநர் சட்டசபை மரபை மதிக்கவில்லை என்று எப்படிக் குற்றம் சாட்ட முடியும்?
11. தொழில்கள் வெளியேற்றம்
- ஆளுநர் குற்றச்சாட்டு: “மறைமுகக் கட்டணம் மற்றும் நெருக்கடியால் தொழில்முனைவோர் தமிழ்நாட்டை விட்டு ஓடுகிறார்கள்.”
- எங்கள் கேள்வி: தொழில் செய்பவன் ஓடிவிட்டால், நாளை இந்த மாநிலத்திற்கு யார் சோறு போடுவார்கள்?
12. அரசு ஊழியர்கள் அதிருப்தி
- ஆளுநர் குற்றச்சாட்டு: “அரசு ஊழியர்கள் அனைவரும் அதிருப்தியில் உள்ளனர்.”
- எங்கள் கேள்வி: அரசாங்கத்தை இயக்குபவர்களே அதிருப்தியில் இருந்தால், அரசு இயந்திரம் எப்படி இயங்கும்?
13. தேசிய கீதம் அவமதிப்பு
- ஆளுநர் குற்றச்சாட்டு: “தேசிய கீதம் அவமதிக்கப்பட்டது. முதல் கடமை மீறப்பட்டது.”
- எங்கள் கேள்வி: இந்த 13-வது பாயிண்ட்டை மட்டும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, மீதமுள்ள 12 பாயிண்டுகளையும் குழிதோண்டிப் புதைக்கப் பார்க்கிறீர்களே… மக்களை என்ன முட்டாள்கள் என்று நினைத்தீர்களா?
முடிவுரை: நாங்கள் விளையாட்டுப் பொம்மைகள் அல்ல!
அரசாங்கமே! தேசிய கீதம் எப்போது பாட வேண்டும் என்ற மரபு முக்கியம்தான். ஆனால், அதைவிட முக்கியம் மக்களின் உயிர்.
“ஆளுநர் தாண்டிப் போனார், உட்கார்ந்தார், எழுந்தார்” என்று வர்ணனை செய்வதை நிறுத்துங்கள். மேலே உள்ள முதல் 12 குற்றச்சாட்டுகள் உண்மையா, பொய்யா?
- உண்மை என்றால், தலைகுனிந்து மன்னிப்பு கேளுங்கள்.
- பொய் என்றால், தேசிய கீதத்திற்கு காட்டிய அதே ஆக்ரோஷத்துடன் மறுப்பு அறிக்கை வெளியிடுங்கள்.
இதைச் செய்யாமல், மக்களை உணர்ச்சிவசப்பட வைத்து, உங்கள் நிர்வாகத் தோல்விகளை மறைக்க நினைத்தால்… மக்கள் விழித்துக் கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை. நாங்கள் விளையாட்டுப் பொம்மைகள் அல்ல; வாக்களித்த எஜமானர்கள்!
இறுதிப் பகுதி: சட்டம் சாமானியனுக்கு மட்டும்தானா? – இந்த இருவருக்கும் என்ன தண்டனை?
இந்த ஒட்டுமொத்த நாடகத்தையும் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு சாமானிய குடிமகனாக, அதிகார வர்க்கத்தின் முகத்தில் அறையும் சில கேள்விகளை இங்கே முன்வைக்கிறோம்.
1. இது கால்பந்து விளையாட்டா? ஆளுநரும் சரி, முதலமைச்சரும் சரி… நீங்கள் இருவரும் மாறி மாறி அரசியல் செய்கிறீர்கள் என்பது தெரிகிறது. ஆனால் அரசியல் என்பது “நீயா? நானா?” என்று மல்லுக்கட்டுவது அல்ல. அரசியல் என்பது மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதும், அவர்கள் முகத்தில் சந்தோஷத்தைக் கொண்டு வருவதுமான “சேவை”. ஆனால், இங்கே நீங்கள் ஆடுவது “ஈகோ” விளையாட்டு. அந்த விளையாட்டில் பயன்படும் கால்பந்து—பெண்களின் பாதுகாப்பும், மக்களின் உயிரும். எங்களைப் பந்தாடி விளையாட உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?
2. வெறும் 52 வினாடிகள்… ஒரு வார்த்தை வராதா? தேசிய கீதம் பாடுவதற்குத் தேவைப்படுவது வெறும் 52 வினாடிகள் மட்டுமே.
-
ஆளுநருக்கு ஒரு கேள்வி: “சரி, கடைசியில் பாடுகிறோம், வாருங்கள்” என்று ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் உங்கள் கௌரவம் என்ன குறைந்தா போயிருக்கும்?
-
அரசுக்கு ஒரு கேள்வி: “சரி ஐயா, உங்கள் திருப்திக்கு முதலிலேயே பாடுகிறோம்” என்று விட்டுக் கொடுத்திருந்தால் தமிழ்நாட்டின் மானம் என்ன கப்பல் ஏறியா போயிருக்கும்?
மேடைகளில் மணிக்கணக்கில் ஓராயிரம் வார்த்தைகள் பேசும் உங்களுக்கு, இந்தப் பிரச்சனையைத் தீர்க்க “சரி” என்ற ஒற்றை வார்த்தையைப் பேச மனம் வரவில்லையா? ஓராயிரம் பிரச்சனைகளைச் சுமந்து நிற்கும் மக்களை விட, உங்கள் தன்முனைப்பு (Ego) அவ்வளவு பெரிதாகிவிட்டதா?
3. சட்டம் சாமானியனுக்கு மட்டும்தானா? இப்போதுதான் முக்கியமான கேள்வி வருகிறது. இதே தவறை, வீதியில் செல்லும் ஒரு சாமானிய மனிதன் செய்திருந்தால் என்ன நடந்திருக்கும்? ஒரு தியேட்டரிலோ, பொது நிகழ்ச்சியிலோ தேசிய கீதம் இசைக்கும்போது ஒரு சாமானியன் எழுந்து நிற்கவில்லை என்றால், அடுத்த நிமிடமே அவன் சட்டையைப் பிடித்து இழுத்துச் சென்று, “தேசத் துரோக வழக்கு” பாய்ந்திருக்கும் இல்லையா? சிறைக் கம்பிகள் அவனுக்காகக் காத்திருக்கும்.
ஆனால், இன்று மாநிலத்தின் இரண்டு உயர் பதவிகளில் இருப்பவர்கள், அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் கடமையை (51A-a) மீறி, தேசிய கீதத்தை வைத்து வியாபாரம் பேசுகிறார்கள், நிபந்தனை விதிக்கிறார்கள். ஆனால், அவர்கள் மீது எந்த வழக்கும் இல்லை.
ஏன்? அதிகாரம் படைத்தவர்களுக்குச் சட்டம் வளைந்து கொடுக்குமா? சட்டம் என்பது சிலந்தி வலை போல, அதில் வண்டுகள் (சாமானியர்கள்) மாட்டிக்கொள்வார்கள், யானைகள் (அதிகாரிகள்) அதை உடைத்துக்கொண்டு போய்விடுவார்களா?
4. நீதிமன்றம் ஏன் மௌனம் காக்கிறது? எதற்கெடுத்தாலும் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்யும் நீதிமன்றங்கள், அரசியலமைப்புச் சட்டம் கண்முன்னே கேலிக்கூத்தாக்கப்படும்போது வேடிக்கை பார்ப்பது ஏன்? நிர்வாகத்தின் பொறுப்பான ஆளுநரும், அதை வழிநடத்தும் முதலமைச்சரும் செய்யும் இந்தத் தவறுக்குத் தண்டனை இல்லையா?
முடிவாக… மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அலட்சியமாக இருக்காதீர்கள். சட்டம் வேண்டுமானால் அதிகாரத்திற்கு முன் மண்டியிடலாம். ஆனால், மக்கள் மன்றம் விழித்துக்கொண்டால்… உங்கள் “ஈகோ” விளையாட்டு முடிவுக்கு வரும்.
ஏனென்றால், அரசியல் என்பது மக்களை ஆள்வது அல்ல; மக்களுக்காக வாழ்வது! அந்த அடிப்படைப் பாடம் தெரியாதவர்கள் பதவியில் நீடிப்பதே இந்த ஜனநாயகத்திற்குச் செய்யும் துரோகம்.
விரைவில்… “சட்டம் சாமானியனுக்ககே” என்ற தலைப்பில்!
– வித்தகன் வியூகத்தில்…
“வித்தகன் விதைத்து விட்டான். விதைகளை உள்வாங்குவது, நிலமாகிய உங்களுடைய கடமை. நீங்கள் உள்வாங்கினால்… விதைகள் வளர ஆரம்பித்துவிடும்!”
தீர்வு: வாய்வார்த்தை வேண்டாம்… வெள்ளையறிக்கை வேண்டும்!
“ஆளுநர் பொய் சொல்கிறார், அரசியல் செய்கிறார்” என்று மேடை போட்டுப் பேசுவதை நிறுத்துங்கள். இது அரசியல் பிரச்சனை அல்ல; நிர்வாகப் பிரச்சனை.
இந்த 12 கேள்விகளுக்கும் சரியான பதிலை, புள்ளி விவரங்களுடன் “வெள்ளையறிக்கையாக” (White Paper) வெளியிடுங்கள்!
பொய் என்றால்: உங்கள் வெள்ளையறிக்கையின் ஒவ்வொரு பக்கமும் ஆளுநரின் முகத்தில் அறையும் உண்மையாக இருக்கட்டும்.
உண்மை என்றால்: மௌனம் காப்பது குற்றத்திற்குச் சமம் என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்.
“வாய்வார்த்தை காற்றில் கரையும்; ஆவணங்கள் மட்டுமே வரலாற்றில் நிற்கும்!”
எங்களுக்குத் தேவை விளக்கம் அல்ல; வெளிப்படைத்தன்மை! தைரியம் இருந்தால், மடியில் கனமில்லை என்றால்… வெளியிடுங்கள் வெள்ளையறிக்கையை!
⚠️ பொறுப்புத் துறப்பு (Disclaimer):
“இக்கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள 13 குற்றச்சாட்டுகளும், தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பின் (எண்: 03, தேதி: 20.01.2026) அடிப்படையில் அமைந்தவை. இவை கட்டுரையாசிரியரின் தனிப்பட்ட கருத்துக்கள் அல்ல.
இந்தத் தரவுகள் தவறானவை என்று தமிழக அரசு அல்லது சம்பந்தப்பட்ட துறைகள் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கும் பட்சத்தில், எங்களது இணையதளத்தின் [விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் – பிரிவு IV]-ன் படி (Terms & Conditions – Section IV), 48 மணி நேரத்திற்குள் உரிய திருத்தங்கள் செய்யவும், மறுப்புச் செய்தி வெளியிடவும் நாங்கள் தயாராக உள்ளோம். உண்மையை மக்களிடம் சேர்ப்பதே எங்களின் நோக்கம்.”

cv