பெயரளவில் தேவி… பிடியில் ஒரு உயிர்!
பிறந்தபோது ‘மகாலட்சுமி’ வந்தாள் என்று
வாசலில் மாவிலை கட்டி,
குத்துவிளக்கு ஏற்றி கொண்டாடினார்கள்!
தவழ்ந்தபோது உலகமே
அவள் காலடியில் இருப்பது போல்
பிம்பம் காட்டினார்கள்.
ஆனால், எழுந்து
நின்றபோதுதான் தெரிந்தது…
அவள் கால்களுக்குப் பின்னால்
ஆயிரம் கண்ணுக்குத் தெரியாத சங்கிலிகள்!
“அங்கே போகாதே… இப்படி பேசாதே…
அவர்கள் என்ன சொல்வார்களோ?”
என்ற நிழல்கள் அவளைத் துரத்த,
அவளது சொந்தக் கனவுகள் மட்டும்
அறையினுள்ளே சிறைபட்டன.
கல்வியோ, காதலோ, வாழ்வாதாரமோ…
எல்லாவற்றையும் மற்றவர்கள் எழுதி முடிக்க,
கடைசிப் பக்கத்தில் கையெழுத்து மட்டும் போடும்
வெறும் இயந்திரமாக மாறுகிறாள் அந்த ‘தேவி’.
சிலையாய் இருக்கும் லட்சுமிக்கு
அபிஷேகம் செய்யும் இந்த உலகம்,
உயிராய் இருக்கும் பெண்ணுக்கு
சுய அதிகாரம் தர மறுப்பது ஏனோ?
அவளைத் தெய்வமாகப் பார்க்க வேண்டாம்…
முடிவெடுக்கும் உரிமை கொண்ட
ஒரு ‘மனிதனாக’ பார்த்தாலே போதும்,
அவள் சிறகுகள் வானத்தைத் தொடும்
மானுடத்தின் தோழன் வித்தகன் Image Courtesy: Swetha Dorathy
Loading read count...

