மழலை மாறா மணவாழ்க்கை
மழலை மாறா மணவாழ்க்கையில்,
கணவன்-மனைவி எனும் உறவில்
கௌரவம் துறந்து குழந்தையாவோம்!
ஓடி ஆடிப் பாடி மகிழ்ந்து
உள்ளம் திறந்தே விளையாடுவோம்!
முத்தம் சிந்தத் தோன்றுகிறதா?
மெல்ல மெய்மறந்துஅணைக்கத் துடிக்கிறதா?
தடையின்றிச் செய்திடு அக்கணமே —
அந்தத் தருணமே வாழ்வின் வரமே!
வார்த்தைகள் தீர்ந்த போதெல்லாம்
வாடி வருந்தி மௌனம் காக்காதே!
பகலில் நடந்த கதைகளையெல்லாம்
ஓர் பாசக்கவிதையாய் வாசித்திடு!
அவள் பேசிய அரைமணி நேரமும்
உந்தன் அன்பைச் செவியால் ஊற்றிடு!
பேசப் பேசத் தடைகள் உடையும்,
பேரின்பக் கதவுகள் மெல்லத் திறக்கும்!
பொருட்கள் உடைந்தால் குழந்தையிரண்டு
அங்கே போரிட்டுப் பிரிந்து நிற்பதில்லை;
வெறும் பொருட்கள் மீதா காதல் உனக்கு?
வெகுவாய் யோசி, மனிதனே!
சின்னஞ்சிறு பிள்ளையாய் மாறிடுவோம்,
உறவில் சிந்தும் கண்ணீரைத் துடைத்திடுவோம்!
குழந்தை உள்ளம் கொண்டு வாழ்ந்தால்
நம் குடும்பம் என்றும் நந்தவனமே!
– உன் அன்பின் வித்தகன்

