ஆயிரம் வெற்றிகளும் ஒற்றை எதிர்பார்ப்பும்
அழுகையில் பிறந்து, பின் புன்னகையில் மலர்ந்து,
மல்லாந்து கிடந்து, தன் கைகால்களை அசைத்து,
தானாகவே புரண்டு, மெல்லத் தவழத் தொடங்கி,
சுவர் பிடித்து எழுந்து, தத்தித் தத்தி நடந்து…
ஒவ்வொரு அடியும் இயற்கையின் உந்துதல்!
யாரும் கற்பிக்காமல் கற்ற ஆயிரம் சிறு வெற்றிகள்!
விழுந்து, முட்டி மோதி, மீண்டும் தாமாகவே எழுந்து,
தன்னம்பிக்கையைத் தானே சுவைக்கும் அற்புதப் பயணம்.
உணவூட்டி, வெறும் பாதுகாப்பை மட்டுமே வழங்கிவிட்டு,
“நானே வளர்த்தேன்” என மார்தட்டும் வெற்றுப் பெருமை!
வளர்வது இயற்கையின் விதி, நாம் வெறும் பார்வையாளர்களே,
ஆயினும் உரிமை கொண்டாடும் மனித மனத்தின் விந்தை.
ஆயிரம் இயற்கை வெற்றிகளைத் தாண்டி வந்த உயிரை,
‘வேலை’ எனும் ஒற்றை வட்டத்திற்குள் மட்டும் அடைத்து,
நாளை நம்மைக் காப்பான் என லாபக் கணக்குப் பார்க்கும்
சுயநலச் சமூகத்தின் எதிர்பார்ப்புகள் எனும் கிருமிகள்,
பிள்ளைகளின் இயல்பான கனவுகளைத் தின்று தீர்க்கின்றன.
உன் ஆசைக்காகப் பெற்றாயா? இல்லை அவனை ஆசைப்படப் பெற்றாயா?
“எந்தப் பலனுமின்றியும் என் ஆயுள் வரை உன்னைத் தாங்குவேன்”
எனச் சொல்லும் பொதுநலமே இங்கே மெய்யான அன்பு.
குழந்தை தானாகவே வளர்கிறது, தன் சொந்த வெற்றிகளோடு!
-வெற்றியின் வித்தகன்
