ஐம்புலனும் பார்க்கின்றேன் ஐம்பொன் சிலையவளை…
அம்புவிழும் நெஞ்சுக்குள் ஆசைவார்த்தை உளறலானது!
நேருக்கு நேராக நெஞ்சத்து விழிகள் மோத…
பார்வைக்குத் தோற்றுப்போய் பாதம் பார்த்தேன் திருடன்போல!
நேரினிலோர் பெண்ணைக்கண்டு நேசம் பேசுதல் கடினமடா…
காரிகையின் தடையுடைத்தால் காதல் என்றும் இனிமையடா!
நடையழகை நெடுந்தூரம் நானுமங்கே பின்தொடர…
இடையினிலே “நில்”லென்றே என் நாவும் அவசரப்பட…
திரும்பிநின்ற திருமகளின் திசைபறந்த கார்கூந்தல்,
அரும்பயத்தைத் தந்திடும் அய்யனார் அருவாளானது!
உதட்டினிலே மூச்சுவிட்டு உறுத்துநின்ற முடிவிலக்க…
விதித்ததென்ன? அவ்வுதட்டின் ரேகையென் ஆயுள் ரேகையென!
கண்ணுருட்டி நெற்றியுயர்த்தி “என்ன”வென்று அவள் கேட்க…
பெண்ணிவள் திருடியோ? இல்லைப் பெருந்திமிர்க் காரியோ?
மூளைக்குச் செய்திபோக “முந்திக்கொள்” என்றதுவே…
“நாளைக்குக் கிடைக்காது நன்றாக ரசி” என்றதுவே!
கீழ்நோக்கிப் பார்வைசாயும் கெஞ்சியது என் கண்கள்…
வாழ்நாளில் இதுபோதும் வழியனுப்பச் சொன்னது மூளை!
நினைவற்று நின்றேனே நெடுஞ்சிலையாய் அவளுக்குமுன்…
கனவற்றுப் போனதென்ன கையாலே அவள் தட்ட!
ஐம்புலனும் பார்க்கின்றேன் ஐம்பொன் சிலையவளை…
வெட்கத்தின் காதலன் – வித்தகன்”
