மழையின் முன்னுரை… காதலின் முகவுரை!
மழை வருவதற்கு முன், வானம் எந்தக் காரணமும் இல்லாமல் கருமேகம் பூடிக்கொள்ளும்…
காதல் வருவதற்கு முன், மனம் எந்தக் காரணமும் இல்லாமல் அமைதியாய் மௌனம் சூடிக்கொள்ளும்!
எங்கிருந்தோ வரும் ஒரு சில்லென்ற காற்று, மரக்கிளைகளை உரசி இலைகளைச் சிலிர்க்க வைக்கும்…
எதிர்பாராமல் கிடைக்கும் ஒற்றைப் பார்வை, உயிர் வரை ஊடுருவி நரம்புகளைச் சிலிர்க்க வைக்கும்!
இன்னும் ஒரு சொட்டு நீர்கூட விழவில்லை, ஆனாலும் காற்றில் முன்கூட்டியே கலந்திருக்கும் மண் வாசனை…
இன்னும் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை, ஆனாலும் கண்களுக்குள் முன்கூட்டியே பிறந்துவிடும் உணர்வின் வாசனை!
இப்போது வருமா, இல்லை ஏமாற்றிச் செல்லுமா என, மேகத்தைப் பார்த்து ஏங்கும் காய்ந்த பூமி…
இன்று சொல்வாளா, இல்லை கடந்து செல்வாளா என, அவள் முகத்தைப் பார்த்து ஏங்கும் தவிக்கும் இதயம்!
திடீரென வானைக் கிழிக்கும் ஒரு மின்னல்… சடசடவெனக் கொட்டித் தீர்க்கிறது பெருமழை!
திடீரென இதழோரம் பூக்கும் ஒரு சிறு புன்னகை… சடசடவென மௌனம் உடைத்து நிறைகிறது பெருங்காதல்!
ஆம்,
மழையும் காதலும் ஒன்றுதான்… இரண்டும் எப்போது வரும் என யாருக்கும் தெரியாது!
ஆனால் வந்துவிட்டால், நம்மை முழுதாக நனைக்காமல் ஒருபோதும் விடாது!
– அன்பின் காதலன்… வித்தகன்
