என்னை இயக்கும் குரல்!
நானோ…
ஒளியையும் நிழலையும் வைத்து
உலகத்தை உருவாக்குபவன்!
நீயோ…
வெறும் மூச்சுக் காற்றை வைத்து
என் உலகத்தையே ஆளுகிறாய்!
ஒரு காட்சியின் ஆழத்தைக் கொண்டுவர,
நான் கேமராவின் லென்ஸுக்குள் தேடுகிறேன்…
ஆனால், உன் தொண்டைக்குழியில் பிறக்கும்
அந்த ஒற்றை ‘ஆலாபனையில்’,
என் ஒட்டுமொத்த திரைக்கதையின் ஆழமும்
எளிதாக அடங்கிவிடுகிறதே!
என் திரையில் நான் காட்டும் அழுகைக்குக்
கண்ணீரும் வெளிச்சமும் தேவை.
ஆனால், மைக்ரோபோன் முன்னே கண்மூடி நின்றபடி…
நீ மெல்லிசையாய் உதிர்க்கும் அந்தச் சிறு ‘ஹம்மிங்’ (Humming)
எந்தக் கேமராவும் இல்லாமல் என் கண்களைக் கலங்கச் செய்கிறது!
‘ஆக்ஷன்’ சொல்லி, நான் உருவாக்கும் மாயங்களை விட,
நீ அனாயாசமாகத் தொட்டுச் செல்லும் ‘ஸ்வரங்கள்’ நிஜமானவை.
நான் பல கோணங்களில் (Angles) செதுக்கத் துடிக்கும் காதலின் வலியை,
உன் சுருதிப் பெட்டியின் ஒற்றை மீட்டலில் நீ சொல்லிச் செல்கிறாய்.
என் திரைக்கதைக்கு உயிரூட்ட நடிகர்கள் தேவை…
ஆனால், நீ பாடும் அந்த நிமிடங்களில்,
உன் குரலே காதலனாகவும், மழையாகவும், பிரிவாகவும் மாறி
முழு உலகத்தையும் தன் வசப்படுத்துகிறது!
ஆம்…
உன் ரெக்கார்டிங் தியேட்டரில் நான் இயக்குநன் அல்ல,
நீ பாடும் உணர்வுகளின் நிரந்தரப் பார்வையாளன்!
உலகம் என்னைச் சிறந்த இயக்குநன் என்று கொண்டாடுகிறது…
ஆனால், நீ பாடும் அந்த மூன்று நிமிடப் பாடலுக்குள்
என்னையே நான் தொலைத்துவிட்டு,
உன்னிடம் ‘கட்’ (Cut) சொல்ல மறந்து உறைந்து நிற்கிறேனே…
உண்மையில், என்னை இயக்கும்
ஆகச்சிறந்த ‘இயக்குநர்’ நீதானடி என் குரல் தேவதையே!
-உன்னால் இயக்கப்படும்… வித்தகன்
