அவள் — ஒரு கரிசல் நிலத்தின் ரகசியம்
அவளைப் பார்த்ததும்“அழகு” என்று சொல்லஎன் நாக்கு மறுத்துவிட்டது.
அந்த வார்த்தைஅவளுக்கு ரொம்பச் சின்னது.
அவள் முகத்தைப் பார்த்தால் எனக்கு முதலில் நினைவுக்கு வருவது
ஒரு பூ அல்ல மழைக்காகக் காத்திருக்கும் கரிசல் நிலம்.
அவள் சிரிப்புஅவரைப் பூ போல சிறியதுதான்… ஆனால்
ஒரு கொடியையே பூக்க வைக்கும் அளவுக்கு நம்பிக்கை கொண்டது.
அவள் கண்கள் துவரைப் பூ மஞ்சளுக்குள் ஒளிந்திருக்கும்
அந்தச் சின்னச் சிவப்பைப் போல, சிரிப்புக்குள் கூட
ஒரு ரகசியத்தை வைத்திருப்பவை.
அவள் பேச்சு பாகற்காய்ப் பூ கசப்பே இல்லாமல் கொஞ்சம் மஞ்சளாகப் பூத்து,
என் நாளெல்லாம் காயாகத் தொங்க வைக்கும்.
அவள் நடையில் சீனி அவரைக்காயின் நீளம் முடிவே தெரியாத
ஒரு பச்சைக் கொடி போல, அவள் என்னைக் கடந்து சென்றாலும்
என் பார்வை மட்டும் அதன் நுனியைத் தேடிக்கொண்டே இருக்கும்.
அவள் கன்னம் பருத்திப் பூ. முதலில் பார்த்தால் வெறும் மென்மை.
மீண்டும் பார்த்தால் அந்த மென்மைக்குள்ளே மாறிக்கொண்டிருக்கும்
ஒரு நிறம்.
அவள் கண் இமைக்கும் நேரம் வெண்டைக்காய்ப் பூ
மஞ்சளுக்குள் திடீரென்று தெரியும் அந்த அடர்ந்த நிறம்போல
என் கவனத்தை அங்கேயே கட்டிப்போடும்.
அவள் கூந்தல் மட்டும்… தட்டைப் பயறு கொடி.
ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்கு,அங்கிருந்து இன்னொரு திசைக்கு
என் நினைவுகளைப் போல தன்னுடைய வழியைத் தானே
தேடிக்கொண்டு படர்கிறது.
அவள் விரல்களில் உளுந்துப் பூவின் எளிமை.
அவள் அருகில் வந்தால் பாசிப்பயிறுப் பூவின்
அந்தச் சிறிய மஞ்சள் வெளிச்சம்.
அவ்வளவுதான் அவள். பெரிய தோட்டமில்லை.
அரண்மனைப் பூங்காவுமில்லை. ஒரு கரிசல் வயல்.
வெயில் வந்தாலும் தன் வேலையைச் செய்யும்,
மழை தாமதமானாலும் தன் விதையை மறக்காத,
பூ உதிர்ந்தாலும் அடுத்த காயை
ரகசியமாகத் தயாரித்துக்கொண்டிருக்கும்
ஒரு நிலம்.
அதனால்தான் அவளைப் பார்க்கும்போதெல்லாம்
“நீ அழகாக இருக்கிறாய்” என்று சொல்ல எனக்கு வருவதில்லை.
அதற்குப் பதிலாக என் மனசு மெதுவாகச் சொல்கிறது
“இந்தப் பெண்ணை ஒரு முறை அல்ல…
ஒரு பருவம் முழுவதும்
பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.”
ஏனென்றால்,
அவள் ஒரு பூ இல்லை.
பூக்கிற ஒவ்வொரு பருவத்திலும்
புதிதாக என்னை
காதலிக்க வைக்கும்
ஒரு கரிசல் நிலம்.
— கரிசல் நிலத்தின் வித்தகன்
