“உன் நண்பர்கள் யார் என்று சொல்… உன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நான் சொல்கிறேன்!”
நண்பர்களே, வித்தகன் விதையின் இந்த வாரப் பதிவில் நாம் பார்க்கப் போவது, நமது வாழ்க்கைப் பயணத்தில் நம்மை உச்சத்திற்குச் கொண்டு செல்லும், அல்லது அதலபாதாளத்தில் தள்ளிவிடும் ஒரு முக்கிய உறவைப் பற்றித்தான். அதுதான் ‘நட்பு’.
பள்ளி மற்றும் கல்லூரிப் பருவத்தில் பெற்றோர்களை விட, ஆசிரியர்களை விட ஒரு மாணவன் அதிகம் நம்புவதும் நேசிப்பதும் நண்பர்களைத்தான். ஆனால், அந்த நட்பு உங்களுக்குப் பலமா? அல்லது உங்களை வீழ்த்தும் பலவீனமா?
1. கழுகும் கோழிக் கூட்டமும்: ஒரு குட்டிக்கதை
ஒரு கழுகுக் குஞ்சு, சிறு வயதிலேயே ஒரு கோழிக் கூட்டத்தில் சிக்கிக் கொண்டது. அது தன்னை ஒரு கோழி என்றே நினைத்து, கோழிகளைப் போலவே தரையைக் கிளறி இரை தேடியது; சிறகுகள் இருந்தும் வானத்தில் பறக்க முயற்சிக்கவே இல்லை. ஒருநாள் வானத்தில் ஒரு கழுகு கம்பீரமாகப் பறப்பதைப் பார்த்து, “நானும் அப்படிப் பறக்க முடியுமா?” என்று கேட்டது. அதற்கு மற்ற கோழிகள், “நாம் கோழிகள், நம்மால் அப்படிப் பறக்க முடியாது” என்று கிண்டலாகச் சிரித்தன. இந்தக் கழுகும் தன் வாழ்நாள் முழுவதும் வானத்தைப் பார்க்காமலேயே ஒரு கோழியாகவே வாழ்ந்து இறந்துபோனது.
நட்பும் இப்படித்தான்! உங்களுக்குள் எவ்வளவு திறமைகள் இருந்தாலும், எந்த இலக்கும் இல்லாத, எதிர்மறை எண்ணங்கள் கொண்ட நண்பர்களுடன் சேர்ந்தால், உங்களின் சிறகுகளும் முடக்கப்பட்டுவிடும்.
2. அறுசுவைத் தத்துவமும்… என் நிஜ அனுபவமும்!
“அப்படியானால் கெட்ட நண்பர்களை ஒதுக்கிக் கொண்டே இருக்க வேண்டுமா?” என்று நீங்கள் கேட்கலாம். நல்ல நண்பர்கள், கெட்ட நண்பர்கள் என்று யாரையும் பாகுபாடு பார்த்துப் பழக வேண்டியதில்லை. நாம் அனைவருடனும் பேசலாம், பழகலாம். ஆனால், நமக்கான சுயக்கட்டுப்பாடு என்று ஒன்று உறுதியாக இருக்க வேண்டும்.
ஒரு தட்டில் இனிப்பு, கசப்பு, காரம் என அறுசுவைகளும் வைக்கப்பட்டிருந்தால், நீங்கள் முதலில் விரும்புவது இனிப்பைத்தான். அந்த இனிப்பை நீங்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டுமே தவிர, “இதுதான் இனிப்பு, இதைச் சாப்பிடு” என்று உங்கள் நண்பர்கள் உங்கள் வாயில் திணிக்கக் கூடாது!
என் கல்லூரி வாழ்வில் நடந்த ஒரு நிஜச் சம்பவம்: நான் கல்லூரியில் படித்த காலத்தில், எனது நண்பர்கள் சிலர் டாஸ்மாக் (TASMAC) சென்று மது அருந்துவார்கள், போகும் வழியில் பெண்களைப் பார்த்துக் கேலி செய்வார்கள். நான் அந்த நண்பர்களோடுதான் பயணிப்பேன். ஆனால், அந்த மதுபானக் கடையினுள் அவர்கள் மது அருந்திக் கொண்டிருக்கும் போதுகூட, நான் வெறும் உணவுகளை (Side dish) உண்பவனாக மட்டுமே தனித்து நிற்பேன்.
அவர்கள் நடுவே இருந்தாலும், “இது எனக்கான பாதை அல்ல” என்பதை நான் தீர்க்கமாக அறிந்திருந்தேன். எந்தச் சூழ்நிலையிலும் என் கட்டுப்பாட்டை நான் இழந்ததில்லை. அதுதான் உண்மையான வலிமை!
3. ‘NO’ சொல்லப் பழகுங்கள்!
உண்மையான நட்பு உங்கள் எல்லைகளை மதிக்கும். நண்பர்களோடு இருங்கள், ஆனால் கெட்ட பழக்கங்களுக்கு வற்புறுத்தப்படும்போது தைரியமாக ‘இல்லை’ (NO) என்று சொல்லப் பழகுங்கள். உங்களை உண்மையாக நேசிக்கும் நண்பன் உங்களின் அந்த முடிவை மதிப்பான். “இதைச் செய்யவில்லை என்றால் நம் நட்பு முறிந்துவிடும்” என்று ஒருவன் மிரட்டினால், அந்த நட்பு தயங்காமல் முறியட்டும்! நட்பை நிரூபிக்க, உங்கள் கொள்கைகளை விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
4. வித்தகன் விதைக்கும் செய்தி
மாணவர்களே! உங்கள் வாழ்க்கையின் தரத்தை, நீங்கள் அதிக நேரம் செலவிடும் கூட்டம்தான் தீர்மானிக்கிறது. யாரிடம் பழகினாலும், உங்கள் சுயக்கட்டுப்பாடு என்னும் வேலி பலமாக இருக்கட்டும். தவறு செய்யும் கூட்டத்தில் இருந்தாலும், உங்களின் தனித்துவத்தை இழக்காமல் நிற்பதுதான் உண்மையான கெத்து!
பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளின் நண்பர்களை எதற்கெடுத்தாலும் குறை சொல்லாதீர்கள். மாறாக, அவர்களை உங்கள் வீட்டிற்கு அழையுங்கள், அவர்களோடு பேசுங்கள். உங்கள் பிள்ளைக்கு எப்பேர்ப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு, எந்தச் சூழ்நிலையிலும் ‘சுயக்கட்டுப்பாட்டோடு’ இருப்பது எப்படி என்று அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.
அடுத்த வார வித்தகன் விதையில்: “தனிமை: சாபமா? வரமா?” – தனிமை உங்களை வாட்டுகிறதா? அந்தத் தனிமையைத் தன்னைச் செதுக்கும் உளியாக மாற்றுவது எப்படி என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
“விமர்சனத்தை மட்டும் வீசவில்லை… தீர்வு என்னும் விதையையும் தூவுகிறேன்!” — வித்தகன் 🖋️
