பின்னால் நடக்கும் சரிபாதி!

Spread the love

குறுக்காகச் சாலையைக் கடக்கிறார்கள்

அந்த நடுத்தர வயதுத் தம்பதிகள்…

முன்னே நிமிர்ந்த நடையோடு கணவன்,

பின்னே வாகனங்களுக்கு நடுவே தட்டுத்தடுமாறி வரும் மனைவி.

திரும்பிப் பார்க்காத அவனது நடையில் இருப்பது கம்பீரமாம்!

இல்லை…

அது காலம் காலமாக ஆணாதிக்கம் கற்பித்த முட்டாள்தனமான அகம்பாவம்!

வாழ்க்கைப்பயணத்தில் ‘சரிபாதி’ என்றவன்,

சாலையைக் கடக்கும்போது மட்டும் ‘என் பின்னால் வா’ என்று சொல்வது எவ்விதத்து நியாயம்?

சாலையில் மட்டுமல்ல… படுக்கையறையிலும் இதே கதைதானோ?

இன்று உறவு கொள்ளலாமா என எவ்வித கூச்சமுமின்றி

உரிமையாய்க் கேட்கும் ஆண், அதே உரிமையை தன் மனைவிக்குத் தந்திருக்கிறானா?

அவள் தேவையை அவள் கேட்டால் தப்பு,

இவன் கேட்டால் மட்டும் அது உரிமையா?

ஆணுக்கு ஒரு நியாயம், பெண்ணுக்கு ஒரு நியாயமென

இது என்ன சமூகத்து சட்டம்?

முதலிரவின் நிர்வாணம் என்பது… பத்து மாதத்தில் பிள்ளை பெறுவதற்கு மட்டுமல்ல!

உடலை மறைக்கும் ஒட்டுத்துணியோடு, உள்ளத்தை மறைக்கும் கூச்சங்களையும் களைந்து

இரு உயிர்கள் ஓருயிராய் இணைவதற்கு!

அத்தனை நெருக்கத்திற்குப் பிறகும், தன் ஆசையை அவள்

வாய்விட்டுக் கேட்க ஒரு ஆண் தைரியம் தரவில்லை என்றால்…

அவன் கட்டிய தாலிக்கு என்னதான் அர்த்தம்?

ஒரு நல்ல கணவன் என்பவன்… தன் இச்சை தீர்ந்ததும் திரும்பிப் படுப்பவனல்ல! “

என் அன்பே… நீ முழுமையாய் மகிழ்ந்தாயா?

உன் ஆசைகள் என்ன?

உன் தேவைகள் என்ன?

இன்னும் சற்று நேரம் நாம் இளைப்பாறலாமா?”

என்று அவளின் உணர்வுகளையும் மதிப்பவன்!

தன் இன்பத்தை மட்டும் எடுத்துக் கொண்டு

அவள் தேவையைப் புறக்கணித்துவிட்டு,

ஒருதலைப்பட்சமாக உறவு முடிந்தால்… அது இல்லறமல்ல…

கணவன் – மனைவி என்ற போர்வையில் நடக்கும் சட்ட அங்கீகாரம் பெற்ற விபச்சாரமே!

இருவர் தேடலும் ஒருசேரத் தீர்ந்தால் மட்டுமே…

அங்கே தாம்பத்தியம் முழுமையடையும்! அதுவரை…

பெண்கள் வெறும் பின்னால் நடக்கும் நிழல்கள் மட்டுமே!

 

Did you find this post helpful?
 0 0
50%
50%
Loading read count...
Share this post:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *