ஒப்பீடு என்னும் துரு: உனக்கான வானம் வேறு!

Spread the love

ஒப்பீடு என்னும் துரு: உனக்கான வானம் வேறு!

   “சூரியனும் சந்திரனும் தங்களுக்குள் எப்போதாவது ஒப்பிட்டுக் கொள்கின்றனவா? இல்லை… அவற்றுக்கான நேரம் வரும்போது அவை அழகாக ஒளிர்கின்றன!”

நண்பர்களே, வித்தகன் விதையின் இந்த வாரப் பதிவில் நாம் பார்க்கப் போவது, பலரது திறமைகளை முளையிலேயே கிள்ளி எறியும் ஒரு கொடிய ஆயுதத்தைப் பற்றித்தான். அதுதான் ‘ஒப்பீடு’ (Comparison).

நாம் எவ்வளவு பெரிய வெற்றியை அடைந்தாலும், “அவனை விட நாம் குறைவுதானே” என்ற ஒற்றை எண்ணம் நமது மொத்த மகிழ்ச்சியையும் திருடிவிடுகிறது. இரும்பை அழிக்கும் துருவைப் போல, மனிதனை அழிக்கும் துருதான் இந்த ஒப்பீடு.

1. மூங்கிலும் பெரணியும்: ஒரு குட்டிக்கதை

ஒரு விவசாயி தன் தோட்டத்தில் ஒரு மூங்கில் விதையையும் (Chinese Bamboo), ஒரு பெரணி (Fern) செடியின் விதையையும் நட்டார். இரண்டுக்கும் சமமாகத் தண்ணீர் ஊற்றிப் பராமரித்தார்.

சில மாதங்களிலேயே பெரணி செடி முளைத்து, பச்சைப்பசேல் எனப் படர்ந்து வளர்ந்தது. ஆனால் மூங்கில் விதையிலிருந்து ஒரு சிறு துளிர் கூட வரவில்லை.

இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு, நான்காம் ஆண்டும் கடந்தது. பெரணி செடி காடு போலப் படர்ந்துவிட்டது. ஆனால் மூங்கில் நட்ட இடத்தில் எந்த மாற்றமும் இல்லை.

ஐந்தாம் ஆண்டு… அந்த மூங்கில் விதையிலிருந்து ஒரு சிறிய துளிர் வெளிவந்தது. அடுத்த ஆறே வாரங்களில், அந்த மூங்கில் மளமளவென வளர்ந்து 90 அடி உயரத்தைத் தொட்டது!

ஆம் நண்பர்களே, அந்த முதல் ஐந்து வருடங்களும் மூங்கில் வளரவில்லை என்று அர்த்தமல்ல. 90 அடி உயரத்தைத் தாங்கிப் பிடிப்பதற்கான தனது ஆணிவேரை, அது பூமிக்கு அடியில் அமைதியாக வளர்த்துக் கொண்டிருந்தது.

2. பெற்றோர்களின் மிகப்பெரிய ஆயுதம்… இல்லை, ஆபத்து!

இன்றைய வீடுகளில் மிகச் சாதாரணமாக ஒலிக்கும் ஒரு வசனம்: பக்கத்து வீட்டுப் பையனைப் பார், அவன் எப்படிப் படிக்கிறான்! உன்னோடுதானே அவனும் டியூஷன் வருகிறான், நீ ஏன் இப்படி இருக்கிறாய்?”

பெற்றோர்களே, உங்கள் பிள்ளையை இன்னொரு பிள்ளையோடு ஒப்பிடுவது, உங்கள் பிள்ளையின் தனித்துவத்தை நீங்களே அவமதிப்பதற்குச் சமம்.

பெரணி செடியைப் பார்த்து மூங்கில் விதையை விவசாயி பிடுங்கி எறிந்திருந்தால் என்னவாகியிருக்கும்?

ஓட்டப்பந்தயமும் முந்திச் செல்லும் மாயையும்!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இலக்கு உள்ளது. அந்த இலக்கை அடைவதுதான் வெற்றியே தவிர, அடுத்தவனை முந்திச் செல்லுதல் அல்ல. 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஓடும் ஒருவனை, 1600 மீட்டர் ஓடும் இன்னொருவனோடு ஒப்பிட்டுப் போட்டி வைத்தால் அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்? இருவரின் பாதையும், இலக்கும், பயண நேரமும் வேறு வேறு அல்லவா?

சாதாரணமாகச் சாலையில் நாம் வாகனத்தில் செல்லும்போது, ஒருவன் நம்மை முந்திச் சென்றால் உடனே நாமும் வேகத்தை அதிகரித்து அவனை முந்திச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் எழும். ஆனால், நிதானமாக யோசித்துப் பாருங்கள்… அவன் போகும் இலக்கோ வேறு, நீங்கள் போகும் இலக்கோ வேறு. அவனோடு போட்டி போட்டு நீங்கள் ஏன் உங்கள் பயணத்தை அபாயகரமாக்கிக் கொள்ள வேண்டும்?

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால்:

வெற்றி என்பது: அடுத்தவனை முந்திச் செல்வது அல்ல, உங்களுக்கான இலக்கை நீங்கள் அடைவது!
தோல்வி என்பது: முயற்சியில் வீழ்வது அல்ல, அந்த முயற்சியை முழுமையாகக் கைவிடுவது!

எனவே, அடுத்தவன் ஓடுகிறான் என்று உங்கள் பாதையை மாற்றாதீர்கள். உங்கள் இலக்கை நோக்கி நிதானமாக, ஆனால் உறுதியாகப் பயணியுங்கள்.

அடுத்தவனின் பாதையில் உனக்கான வெற்றியைத் தேடாதே… கழுகைப் பார்த்து மயில் பறக்க நினைத்தால், அதன் அழகும் போகும், சிறகும் உடையும்! ஒப்பீடு உன்னை அழிக்கும் துரு; தனித்துவமே உன்னை உயர்த்தும் உளி!”

உங்கள் பிள்ளை ஒருவேளை மூங்கிலாக இருக்கலாம். அவனுக்கான வேர் வளரும் வரை காத்திருங்கள். இன்னொருவனோடு ஒப்பிட்டு அவனுடைய தன்னம்பிக்கையைச் சிதைக்காதீர்கள்.

3. ஆரோக்கியமான போட்டியா? நச்சுத்தனமான ஒப்பீடா?

மாணவர்களே, “அப்படியானால் போட்டியில்லாமல் எப்படி முன்னேறுவது?” என்று நீங்கள் கேட்கலாம். போட்டி வேறு, ஒப்பீடு வேறு. இதைப் புரிந்து கொள்ளுங்கள்:

ஆரோக்கியமான போட்டி (Healthy Competition) நச்சுத்தனமான ஒப்பீடு (Toxic Comparison)
உத்வேகம்: மற்றவர் வெற்றியைப் பார்த்து நாமும் முன்னேற வேண்டும் என நினைப்பது. மன அழுத்தம்: மற்றவர் வெற்றியைப் பார்த்து நமக்குத் திறமையில்லை என முடங்குவது.
இலக்கு: நேற்றைய உன்னை விட, இன்று நீ சிறந்தவனாக மாற உழைப்பது. இலக்கு: மற்றவர்களை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என நினைப்பது.
கவனம்: உன் இலக்கின் மீதும், உன் உழைப்பின் மீதும் கவனம் இருக்கும். கவனம்: மற்றவர்களின் வாழ்க்கையின் மீது மட்டுமே முழு கவனமும் இருக்கும்.
சமூக வலைத்தளங்களில் (Instagram, Facebook) மற்றவர்கள் போடும் சிரித்த முகப் புகைப்படங்களைப் பார்த்து, “அவர்கள் மட்டும் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், நம் வாழ்க்கை இப்படிப் போராடிக் கொண்டிருக்கிறதே” என்று நினைக்காதீர்கள். இணையத்தில் அனைவரும் தங்கள் நாடகத்தின் சிறந்த காட்சிகளை (Highlights) மட்டுமே வெளியிடுகிறார்கள்; திரைக்குப் பின்னால் நடக்கும் போராட்டங்களை அல்ல!

அவனைப் போல மாறட்டுமா?” – ஒரு நிஜச் சம்பவம்!

சமீபத்தில் ஒரு நண்பர் என்னிடம் பகிர்ந்துகொண்ட ஒரு சம்பவம் இது. அந்த நண்பரின் தந்தை எப்போதும் அவரை இன்னொரு பையனோடு ஒப்பிட்டு, “அவனைப் பார், எவ்வளவு நன்றாகப் படிக்கிறான், எவ்வளவு சீக்கிரம் கைநிறையச் சம்பாதிக்கப் போய்விட்டான். நீயும் இருக்கியே…” என்று திட்டிக்கொண்டே இருப்பார்.

ஒருநாள் பொறுமையிழந்த அந்த நண்பர், தன் அப்பாவிடம் ஒரு தைரியமான கேள்வியைக் கேட்டார்:

அப்பா, அவன் நிறைய சம்பாதிக்கிறான், சரி… ஆனால் அவனுக்கு மது அருந்தும் பழக்கம் இருக்கிறது, சிகரெட் குடிப்பான், பெண்களைப் போகிற போக்கில் கிண்டல் செய்வான். அவனிடம் எல்லா கெட்ட பழக்கங்களும் இருக்கின்றன. நீங்கள் என்னை அவனை மாதிரியே ஆகச் சொல்கிறீர்களா? அப்படியானால் நானும் அந்தப் பழக்கங்களை எல்லாம் கற்றுக்கொள்ளட்டுமா?”

இந்த ஒற்றைக் கேள்வி அந்தத் தந்தையை வாயடைக்கச் செய்தது.

பெற்றோர்களே புரிந்து கொள்ளுங்கள்: நீங்கள் உங்கள் பிள்ளையை இன்னொருவனோடு ஒப்பிடும்போது, அவனுடைய வெற்றியை (பணம், மதிப்பெண்) மட்டும் உங்கள் பிள்ளைக்குள் திணிக்க முடியாது. ஒரு மனிதன் என்பது அவனுடைய குணாதிசயங்களும் சேர்ந்ததுதான். எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாமல், நல்ல குணங்களோடு உங்கள் பிள்ளை தன் சொந்தக்காலில் மெதுவாக முன்னேறுவது அவமானமல்ல; அதுதான் உங்களுக்கான உண்மையான பெருமை!

4. வித்தகன் விதைக்கும் செய்தி

மாணவர்களே! உங்கள் ஓட்டப்பந்தயம் இன்னொருவரோடு அல்ல. உங்களோடு மட்டும்தான். ஒரு ரோஜாப் பூ, அருகில் இருக்கும் மல்லிகைப் பூவைப் பார்த்துத் தன்னை மாற்றிக் கொள்வதில்லை; அது ரோஜாவாகவே தன் வாசனையைப் பரப்புகிறது. நீங்கள் நீங்களாக இருங்கள். உங்களுக்கான தனித்துவத்தைக் கண்டறியுங்கள்.

பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளின் மதிப்பெண்களையும், நண்பர்களின் பிள்ளைகள் வாங்கும் மதிப்பெண்களையும் தராசில் வைத்து நிறுக்காதீர்கள். உங்கள் பிள்ளை உங்களுக்கான ஒரு தனித்துவமான பரிசு. அவனுக்கான வானம் வேறு. அந்த வானத்தில் அவனைச் சுதந்திரமாகப் பறக்க விடுங்கள்.

உங்கள் குழந்தையின் அத்தியாயம் 1-ஐ, இன்னொரு குழந்தையின் அத்தியாயம் 10-ஓடு ஒருபோதும் ஒப்பிடாதீர்கள்!

“பிறரைத் திரும்பிப் பார்த்து ஓடும் ஓட்டத்தில், உனக்கான பாதையைத் தவறவிடுகிறாய்! இன்னொருவனைப் போல மாற நினைத்து உன் அடையாளத்தை இழக்காதே… நகல்களுக்குச் சந்தையில் வேண்டுமானால் விலை போகலாம், ஆனால் வரலாற்றில் என்றுமே இடமில்லை!”

அடுத்த வார வித்தகன் விதையில்: கவனச்சிதறல் (Distraction): உன் நேரத்தைத் திருடும் கண்ணுக்குத் தெரியாத திருடன்!” – சமூக ஊடக மாயையிலிருந்து தப்பிப்பது எப்படி என்பது பற்றி விரிவாகப் பார்ப்போம்.

விமர்சனத்தை மட்டும் வீசவில்லை… தீர்வு என்னும் விதையையும் தூவுகிறேன்!”

 

Did you find this post helpful?
 0 0
50%
50%
Loading read count...
Share this post:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *