விமானம்
வானத்தைத் தொடுகிறது என்பதற்காக
அதற்கு
தரையை மறந்துவிடும் உரிமை இல்லை.
மனிதனும் அப்படித்தான்—
எவ்வளவு உயரம் சென்றாலும்
தன் தொடக்கத்தை
மறந்துவிடக் கூடாது.
விமானத்தின் வேகம்
அதன் பெருமை அல்ல;
வேகத்திலும்
தன் பாதையை விட்டு விலகாமல் இருப்பதே
அதன் ஒழுக்கம்.
மனிதனின் வாழ்க்கையும் அப்படியே—
ஆசைகள் எவ்வளவு வேகமாக
அவனை இழுத்துச் சென்றாலும்,
அவன் செல்ல வேண்டிய பாதையை
அவன் மனசாட்சி
தீர்மானிக்க வேண்டும்.
விமானத்தை உயர்த்துவது
இறக்கைகள் மட்டுமல்ல;
அதைச் சரியான உயரத்தில் வைத்திருப்பது
கட்டுப்பாடு.
மனிதனை உயர்த்துவதும்
அவனுடைய திறமை மட்டும் அல்ல—
அவன் தன்னையே
கட்டுப்படுத்திக் கொள்ளும்
ஒழுக்கம்.
வானத்தில்
ஆயிரம் பாதைகள் இருந்தாலும்
விமானம்
தன் பயணத்துக்கான பாதையில்தான் செல்லும்.
அதுபோல,
வாழ்க்கையில்
ஆயிரம் வாய்ப்புகள் வந்தாலும்
ஒவ்வொன்றையும் எடுத்துக்கொள்வது
வெற்றி அல்ல;
எதைத் தவிர்க்க வேண்டும் என்று
தெரிந்திருப்பதுதான்
ஒழுக்கம்.
இன்னொரு விசயம்—
விமானம்
எவ்வளவு உயரத்தில் பறந்தாலும்
ஒருநாள்
தரையைத் தொட வேண்டும்.
அதுதான் அதன் தோல்வி அல்ல.
தரையிறங்கத் தெரிந்திருப்பதே
அதன் முழுமை.
மனிதனும் அப்படித்தான்…
வெற்றியில் உயர்ந்த பிறகும்
தாழ்மையாக இறங்கத் தெரிந்தவன்,
அதிகாரம் கிடைத்த பிறகும்
மனிதனாகவே இருப்பவன்,
அவன்தான் உண்மையில்
வானத்தைத் தொட்டவன்.
தரையை மறக்காத… வித்தகன்
