“பயம் என்பது வெளியிலிருந்து வருவதல்ல; எதிர்காலத்தைப் பற்றியும், பிறரின் எதிர்பார்ப்புகளாலும் நமக்குள் நாமே உருவாக்கிக் கொள்ளும் மனச்சிறை!”
நண்பர்களே, வித்தகன் விதையின் இந்த வாரப் பதிவில் நாம் எதிர்கொள்ளப் போவது, நமது கனவுகளைச் சத்தமில்லாமல் நசுக்கும் ஒரு அரக்கனைப் பற்றித்தான். அதுதான் ‘பயம்’ (Fear) — குறிப்பாகத் தேர்வு பயம், நமக்கான இலக்குகளை நாமே நெருக்கடியாக மாற்றிக் கொள்ளும் மனநிலை மற்றும் எதிர்காலம் குறித்த அச்சம்.
கயிறும் பாம்பும்: ஒரு குட்டிக்கதை இருட்டில் நடந்து செல்லும்போது, காலில் தட்டுப்படும் ஒரு கயிற்றைப் பார்த்துப் பாம்பு என்று அலறித் துடிக்கிறோம். வியர்க்கிறது, இதயம் வேகமாகத் துடிக்கிறது. ஆனால், ஒரு சிறிய டார்ச் வெளிச்சம் அடித்த பிறகுதான் அது வெறும் கயிறு என்று புரிகிறது.
தேர்வு மற்றும் எதிர்காலம் குறித்த பயமும் அப்படித்தான். அறியாமை மற்றும் தெளிவின்மை இருக்கும் வரைதான் அந்தப் பயம் உங்களை அச்சுறுத்தும். ‘தயாரிப்பு’ (Preparation) என்ற வெளிச்சம் உங்கள் மூளைக்குள் வந்துவிட்டால், பயம் என்ற மாயை தானாகவே ஓடிவிடும்.
இலக்கும்… காலக்கெடுவின் மாயையும்! வாழ்க்கையில் நமக்கு என்று ஒரு இலக்கு (Target) இருக்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், “வருகிற 10-ஆம் தேதிக்குள் இதை நான் செய்து முடித்தே தீருவேன்” என்று ஒரு பிடிவாதமான காலக்கெடுவை (Deadline) வைத்துக்கொள்வது பல நேரங்களில் ஆபத்தாக முடிகிறது. அந்தத் தேதி நெருங்க நெருங்க, செயலில் இருக்க வேண்டிய கவனம் சிதறி, “ஒருவேளை முடியாமல் போய்விடுமோ?” என்ற அதீத பயம் நமக்குள் வந்துவிடுகிறது. ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் நம்மை நாமே சுருக்கிக் கொண்டு, நாமே ஏற்படுத்திக் கொள்ளும் தேவையற்ற மன அழுத்தம் இது.
பயத்தை வெல்லும் மாற்றுத் திட்டம் (Plan – B) ஒருவேளை நீங்கள் நினைத்த தேதிக்குள் அந்த இலக்கை அடைய முடியவில்லை என்றால் என்ன செய்வது? “ஒருவேளை தோற்றால் என்ன நடக்கும்?” என்ற மோசமான விளைவை ஏற்றுக்கொண்டு விடுங்கள். வெற்றி பெற முடியாத சூழலில், உங்களிடம் ஒரு மாற்றுத் திட்டம் (Plan-B) எப்போதும் கையில் இருக்க வேண்டும். “இந்த முறை முடியாவிட்டால், அடுத்து என்ன செய்யப் போகிறோம்?” என்ற தெளிவும், அடுத்த நகர்வுகளை (Next Moves) முன்னெடுக்கத் தயாராக இருக்கும் மனநிலையும் இருந்தால், பயம் உங்களை நெருங்கவே நெருங்காது.
பெற்றோர்களின் எதிர்பார்ப்பு என்னும் சுமை மாணவர்களுக்குப் பயத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு பெற்றோர்களின் அவசரக் கேள்விகளுக்குத்தான் இருக்கிறது. ஒரு மாணவன் அப்போதுதான் ஒரு பாடத்தைப் படிக்கப் புத்தகத்தைத் திறந்திருப்பான், அல்லது ஒரு வேலையைத் தொடங்கியிருப்பான். உடனே அவனிடம், “எல்லாம் படிச்சிட்டியா? இந்தத் தேர்வில் எவ்வளவு மதிப்பெண் எடுப்பாய்?” என்று ஆரம்பத்திலேயே கேள்விகளைக் கேட்பது மிகப்பெரிய தவறு. ஒரு பயணம் தொடங்கும்போதே அதன் இறுதி முடிவைப் பற்றிக் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தால், அந்த மாணவனுக்குக் கவனச்சிதறலும், தோல்வி குறித்த பயமுமே மிஞ்சும்.
வித்தகன் விதைக்கும் செய்தி
மாணவர்களே! பயம் என்பது ஒரு தடைக்கல்லல்ல; அது நீங்கள் எந்த இடத்தில் உங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று காட்டும் திசைகாட்டி. உங்களுக்கு இலக்குகள் அவசியம். ஆனால், அந்த இலக்குகள் உங்களை ஒரு குறுகிய வட்டத்திற்குள் சிறைப்பிடித்துவிடக் கூடாது. மாற்றுத் திட்டங்களோடு (Plan-B) களத்தைச் சந்திக்கத் தயாராக இருங்கள்; செயலில் இறங்குங்கள், பயம் சுருங்கிவிடும்.
பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகள் ஓடத் தொடங்கும்போதே, எல்லைக்கோட்டைப் பற்றிக் கேள்வி கேட்காதீர்கள். அவர்கள் எவ்வளவு மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்து அதை அவர்கள் மேல் திணிக்காதீர்கள். “தோற்றாலும் நான் இருக்கிறேன்” என்ற ஒற்றை வார்த்தையைச் சொல்லுங்கள். அவர்களைச் சுதந்திரமாகப் படிக்க விடுங்கள்; முடிவு தானாகவே சிறப்பாக அமையும்.
அடுத்த வார வித்தகன் விதையில்: “நட்பு: பலமா? பலவீனமா?” – உங்களை உயர்த்தும் நண்பர்களையும், வீழ்த்தும் நண்பர்களையும் எப்படி அடையாளம் காண்பது என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
“விமர்சனத்தை மட்டும் வீசவில்லை… தீர்வு என்னும் விதையையும் தூவுகிறேன்!” — வித்தகன் 🖋️
