வரையறுக்க முடியாத சுதந்திரம்
மேற்கத்திய அகராதிகளில் எங்கள் தேசத்திற்கு அர்த்தம் தேடாதீர்கள்!
எங்கள் சுதந்திரம் என்பது வெறும் வரைபடத்தின்
எல்லைக்கோடுகளில் இல்லை…
அது நாங்கள் தினசரி சுவாசிக்கும் முரண்பாடுகளின் பேரழகு!
நாங்கள் ஒரே மாதிரி சிந்திப்பதில்லை,
அதனால் தான் நாங்கள் உணர்வற்ற இயந்திரங்கள் அல்ல!
எங்கள் தெருக்களின் சத்தங்களில் தான் உயிர்ப்பின் சங்கீதம் ஒலிக்கிறது.
எங்கள் கடவுள்களுக்கே பல நிறங்கள் உண்டு,
இதில் மனிதர்களை நீங்கள் எப்படிப் பிரிப்பீர்கள்?
யாரோ எழுதிய சரித்திரத்தை நாங்கள் மனப்பாடம் செய்வதில்லை,
எங்கள் சாமானியனின் வியர்வையே
நாளைய சரித்திரத்தை எழுதுகிறது!
எங்களை விமர்சிக்கும் உலகமே,
எங்கள் உழைப்பில்தான் இன்று உறங்கச் செல்கிறது!
எங்கள் பெருமை விண்வெளிக்குச் செல்லும் ராக்கெட்டுகளில் மட்டும் இல்லை,
நள்ளிரவிலும் சாலையோரக் கடையில்
தேநீர் அருந்தும் சாமானியனின் நிம்மதியில் உள்ளது!
ஆம், எங்கள் நிஜமான சுதந்திரம் என்பது…
அதிகாரத்தை நேருக்கு நேர் தட்டிக்கேட்கும்,
எங்கள் ஒற்றை விரலின் தைரியம்!
எங்களை பிரிக்க நினைக்கும் சூழ்ச்சிகளே,
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்…
எங்கள் வேர்கள் வெவ்வேறு, ஆனால்
நாங்கள் சுவாசிக்கும் காற்று ஒன்று!
அது இந்தியா
நாங்கள் கீழே விழுந்தால் சிதறும் கண்ணாடிகள் அல்ல,
எந்த மண்ணிலும் வேரூன்றி முளைக்கும் சுதந்திர விருட்சங்கள்!
முழங்குவோம்… திசையெங்கும் அல்ல,
மனித மனங்களெங்கும்! வந்தே மாதரம்! 🇮
– தேசிகன் வித்தகன்
