நுரையும் நங்கூரமும்!
எல்லோரும் காதலைக் கரையில் மோதும் அலைகளோடு ஒப்பிடுகிறார்கள்…
நான் காதலை நடுக்கடலில் வீசப்பட்ட நங்கூரத்தோடு ஒப்பிடுகிறேன்!
அலைகள் கரையைத் தொட்டுவிட்டுப் பின்வாங்கும் தற்காலிகச் சலனங்கள்,
ஆனால் நங்கூரம்…
ஒருமுறை ஆழத்தில் இறங்கிவிட்டால்,
மேலே நிற்கும்கப்பலே திசைமாற நினைத்தாலும், அதை நகர விடாமல் தடுத்து நிறுத்தும் பிடிவாதம்!
எல்லோரும் காதலைக் கடலின் பிரம்மாண்டத்தோடு ஒப்பிடுகிறார்கள்…
நான் காதலை கடலுக்குள் கரைந்திருக்கும் உப்போடு ஒப்பிடுகிறேன்!
பார்வைக்குத் தெரிவதில்லை, கைகளில் அள்ளினால் சிக்குவதில்லை…
ஆனால், அந்தப் பெரிய கடலையே அழுகிப் போகாமல் பாதுகாப்பது
கண்ணுக்குத் தெரியாத அந்தச் சிறு உப்புதான்!
என் காதலும் அப்படித்தான்… வெளியே தெரிவதில்லை, ஆனால் என் வாழ்க்கையையே கெடாமல் பாதுகாக்கிறது!
எல்லோரும் காதலைக் கலங்கரை விளக்கத்தோடு ஒப்பிடுகிறார்கள்…
நான் காதலைக் கடலடியில் மூடிக்கிடக்கும் சிப்பியோடு ஒப்பிடுகிறேன்!
எங்கிருந்தோ அடித்து வரப்பட்ட ஒரு சாதாரண மணல்துகள் சிப்பிக்குள் விழுந்தது போல,
என்றோ ஒருநாள் நீ கொடுத்த ஒரு சிறு புன்னகை என் நெஞ்சுக்குள் விழுந்தது…
அன்று முதல் அந்த உறுத்தலை நேசித்து நேசித்து,
இன்று அதை என் இதயத்திற்குள் ஒரு விலைமதிப்பற்ற ‘முத்தாக’ மாற்றிக்கொண்டிருக்கிறேன்!
கரைக்கு வந்து உடையும் நுரைகள் எல்லாம் காதலில்லை…
கடலடியில் எந்தச் சத்தமும் இல்லாமல் பல நூற்றாண்டுகளாக ஒரே இடத்தில் கிடக்கிறதே ஒரு கரும்பாறை…
எந்தப் புயல் வந்தாலும் நகராத அந்தப் பாறைதான் உண்மையான காதல்!
-காதல் புரிதலுடன் வித்தகன்
